×

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருப்பு துகள்கள் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளைக் கண்டித்து இரண்டாவது முறையாக ெபாதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் செட்டியார் தெரு, ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, கரும்புகுப்பம், ரெட்டியார் தெரு, புதுகும்மிடிப்பூண்டி, புதுப்பேட்டை, சித்தம்மாள் தெரு, தேவர் தெரு, தேவாங்கு தெரு, காளத்தி தெரு, பாலயோகிநகர், பாலகிருஷ்ணாபுரம், எல்லையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலான மக்கள் நெல், கரும்பு, வாழை, கேழ்வரகு, எல்லு, வேற்கடலை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பல தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கருப்பு துகள்கள் மற்றும் புகை காரணமாக, பொதுமக்களுக்கு பல்வகை நோய்கள் உண்டாகி ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் செல்லும் வழியில் தனியார் இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து அதிகப்படியான கருப்பு துகள்கள் புகைக்கூண்டு வழியாக வெளியேறி மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகள், மரம், செடி, கொடிகள், உள்ளிட்ட இடங்களில் படிந்துள்ளது. இதில், தண்ணீர் உள்ளிட்ட இடங்களில் படிந்ததால் இதனை கவனிக்காமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்கொண்டு வருகின்றனர். இதனாலும் பல்வகை நோய்களுக்கு ஆளாகும் அச்சத்தில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இதனை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் மதன்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் கணபதி ஆகியோர் பொதுமக்களுடன் தொழிற்சாலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் வட்டாட்சியர் பிரித்தி, கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் அனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் மதன்குமார் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி வீடுகளில் கருப்பு துகள்கள் படிந்து வருகின்றது. குழந்தைக்கு முதல் பெரியவர் வரை புற்றுநோய், கடும் இருமல், வீசிங், சளி மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தாக்கப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.

மேலும், இதனை வழியுறுத்தி கடந்த ஆண்டும் இதேபோன்று போராட்டம் நடத்தினோம் என கூறினார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் லிவிங்ஸ்டன் கூறுகையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கண்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவிடும் கரு துகள்களின் அளவை 3 குழுக்களாக பிரித்து காற்றின் மாசு ஆய்வு செய்யப்படும். இதில் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கருப்பு துகள் மற்றும் புகையினை சுத்திகரிக்காமல் அளவுக்கு அதிகமாக வெளியிடுவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருப்பு துகள்கள் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Pudukummidipoondi Panchayat ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...