×

3 ஆண்டுகளுக்கு பிறகு காலில் காயத்துடன் மீண்டும் ஜவ்வாதுமலை திரும்பிய ஒற்றை யானை: முதுமலைக்கு கொண்டு செல்ல கோரிக்கை

போளூர்: காலில் காயத்துடன் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒற்றை யானை ஜவ்வாதுமலைக்கு திரும்பியுள்ளது. இதனை முதுமலைக்கு கொண்டு செல்ல மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 12 யானைகள் கொண்ட கூட்டம் திருவண்ணாமைலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் ஏராளமான குடிசை வீடுகள், பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின. சில ஆண்டுகளில் அவற்றில் 5 யானைகள் எதிர்பாராத விதமாகவும், மின்சாரம் தாக்கியும் அடுத்தடுத்து இறந்தன.

6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி மூலம் பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுசென்றனர். இருப்பினும் மீதமுள்ள ஒரே ஒரு ஆண் யானை மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூட்டத்தில் இருந்து விலகி தனியாக நடமாடி வந்தது. அந்த யானையின் ஒரு தந்தம் விழுந்ததால் ஒற்றை தந்தத்துடன் வயது முதிர்வோடு, கண் பார்வையும் பாதிப்போடு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானையை ஒற்றை யானை என்றே கிராம மக்கள் அழைத்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜவ்வாதுமலையை விட்டு வேறு பகுதிக்கு சென்றிருந்த இந்த ஒற்றை யானை, தற்போது மீண்டும் ஜவ்வாதுமலைக்கு திரும்பியுள்ளது.

ஜம்னாமரத்தூர்-ஆலங்காயம் சாலையில் உள்ள காவலூர் பகுதியில் உள்ள கோயில் குளத்தின் அருகே ஏற்கனவே இந்த யானை பல ஆண்டுகளாக தங்கியிருந்தது. தற்போது மீண்டும் ஜவ்வாதுமலை திரும்பிய இந்த யானை தனக்கு பழக்கமான அந்த இடத்தை மறக்காமல் தற்போதும் அதே இடத்தில் மீண்டும் தங்குகிறது. மேலும் காவலூர் விண்வெளி ஆய்வு மையம் அருகே அடிக்கடி நடமாடுகிறது. இரவு நேரங்களில் உணவை தேடி விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள மா, பலா, நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. ஆனாலும் விவசாயிகள் யாரும் அந்த யானை மீது கோபம் கொள்வதில்லை எனக்கூறப்படுகிறது.

காரணம், தனக்கு தேவையான உணவை பெருத்த அளவில் சேதப்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. யானை தங்கள் நிலத்திற்குள் வந்ததை அறிந்தால் உடனடியாக விவசாயிகள், செல்போன் டார்ச் அடித்தாலோ அல்லது மேளம் அடித்தாலோ உடனடியாக யானை அங்கிருந்து சென்றுவிடுகிறதாம். ஒரு சிலர், ‘தயவு செய்து போய் விடப்பா’ என கெஞ்சினாலும் அங்கிருந்து யானை சென்றுவிடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மலைப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒற்றை யானை இப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த யானைக்கு ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியுடன் நடந்து செல்ல மிகவும் சிரமத்தில் தவிக்கிறது. தனது உணவு தேவைக்காக கண் பார்வை சரியாக தெரியாத நிலையிலும் வேறு வழியில்லாமல் விவசாய நிலங்களுக்கு புகுந்து விடுகிறது. இந்த ஒற்றை யானையால் இதுவரை உயிரிழப்போ அல்லது காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே கூட்டத்திலிருந்து விலகி இந்த யானை தனியாக நடமாடுகிறது. வயது முதிர்வால் உணவை தேடி அலைய முடியாமல் உள்ளது. எனவே தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த யானையை மீட்டு முதுமலை யானைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைத்தனர்.

The post 3 ஆண்டுகளுக்கு பிறகு காலில் காயத்துடன் மீண்டும் ஜவ்வாதுமலை திரும்பிய ஒற்றை யானை: முதுமலைக்கு கொண்டு செல்ல கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Javadumalai ,Mudumalai ,Badumalai ,Jawatumalai ,Audumalai ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...