×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

எட்டு வழிச்சாலை

இன்று மதுரையிலிருந்து திருப்பதி வரை பேருந்தில் செல்ல அதிகபட்சம் பத்து மணி நேரம் ஆகிறது. நமது முந்தைய தலைமுறைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் தேவைப்பட்டது. மூன்று, நான்கு தலைமுறைக்கு முன்னர் திருப்பதி பயணம் என்பது ஒரு மாதம் முதல் மூன்று மாதப் பயணமாக இருந்தது.

முன்னர் சுற்றி வளைத்து, காடு , ஆறுகள், மலைகள் என செல்ல வேண்டியிருந்தது, இன்று பாலங்கள் சரியான பெரிய சாலைகள் மூலம் பயணம் என்பது எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. இதிலும் குறைகள் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், பெருவாரியான மக்களுக்குப் பயணம் என்பது முன்னைவிட இன்று சுகமாகவே மாறியிருக்கிறது.அதற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம். ஒன்று வசதியான வாகனங்கள், மற்றொன்று நல்ல சாலைகள்.

எந்த மரபார்ந்த பாடத் திட்டத்திலும் இந்த இரண்டு கூறுகளும் முக்கியமானவை. ஆயுர்வேதத்தில், மருந்தும் பத்தியமும் முக்கியம். நோயைக் கண்டறிதலும், அதற்கான மருத்துவமும் போல, யோகத்தில் சாதகனுக்கு, சாதனா எனும் பயிற்சியும் முக்கியம்.ஆகவே , பதஞ்சலி , திருமூலர் போன்ற யோகியர், இந்தப் பாதையை அஷ்டாங்க யோகம் என்கின்றனர். அதாவது எட்டு அங்கங்களாக அமைந்த எட்டடுக்கு படிநிலை.

முதலாவதாக- இயமம். இது அறம் சார்ந்த வாழ்க்கைக்கான முக்கியமான ஐந்து கடமைகள் கொண்டது.

அஹிம்சை எனும் பிறவுயிர்களை துன்புறுத்தாமை.
சத்தியம் எனும் உண்மையுடனிருத்தல்
அஸ்தேய எனும் கள்ளாமை.

பிரம்மச்சர்யம் எனும் காமத்தைக் கையாள்தல்
அபரிகிரஹ எனும் பற்று கொள்ளாதிருத்தல் என்கிற ஐந்து அடிப்படைகள்.

இரண்டாவதாக நியமம்.

இதில் ‘சௌச்சா’ எனும் தூய்மை பேணுதல், ‘சந்தோஷா’ எனும் மகிழ்வுடனும் திருப்தியுடனும் இருத்தல், ‘தபஸ்’ எனும் தவமென ஒன்றை தீவிரமாகக் கொள்ளுதல், ‘ஸ்வத்யாயா’ எனும் ஒவ்வொரு நாளும் தன்னை அறிதல், ‘ஈஷ்வர ப்ரணிதானா’ எனும் நம் செயல்கள் அனைத்தையும் இந்த பிரபஞ்சத்தை ஆளும் இறை சக்திக்கு அர்ப்பணித்தல் என ஐந்து வகை நியமங்கள் முன்வைக்கப்படுகிறது.

மூன்றாவதாக ஆசனங்கள் முன்வைக்கப்படுகிறது. பதஞ்சலியின் கூற்றுப்படி சுகமாகவும், ஸ்திரமாகவும் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ அதுவே ஆசனம் எனப்படுவது. நான்காவதாக பிராணாயாமம் சொல்லப்படுகிறது. பிராணன் என்பது உயிராற்றல் என நாம் முன்னர் சொன்ன அந்த உயிராற்றலை மூச்சின் உதவி கொண்டு, மேலெழச்செய்தல்.ஐந்தாவதாக பிரத்யாஹாரம் எனும் புலன்களை உள்நோக்கி திருப்புதல் அல்லது சரியாக நிர்வகித்தல்.

ஆறாவதாக தாரணா எனப்படும் ஒன்றைத் தொடர்ந்து கவனித்தல், ஒழுகுதல் எனப்பெயர், எண்ணெய் மேலிருந்து கீழாக ஊற்றப்படும் பொழுது, எப்படி இடையறாது வழிகிறதோ அது போல ஒன்றை தொடர்ந்து அறுபடாமல் செய்தல், நினைத்தல் ,சிந்தித்தல்.ஏழாவதாக வருகிறது தியானம், ஒரு உருவத்தையே, சொல்லையோ , முழு சிந்தனையுடன் ஒன்றி செய்தல், இதில் பல்வேறு வகைப்பட்ட தியான முறைகள் இருந்தாலும், தாரணையின் தொடர்ச்சியாகவே தியானம் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மனம் தன் செயல்பாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விடுகிறது, இறுதியாக சமாதி நிலை முன்வைக்கப்படுகிறது. இது மனம் , உடல், இயக்கம் என அனைத்தும் ஒடுங்கிய நிலை.மேலே கூறப்பட்ட இந்த படிநிலைகளை அஷ்டாங்க யோகம் எனலாம். நமக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒன்றுதான்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இதே படிநிலையில்தான் தொடங்க வேண்டுமா? அல்லது இதில் நாம் எந்த இடத்தில் நம்மை பொருத்திக்கொள்வது? மற்றும் எங்கிருந்து தொடங்குவது போன்ற அடிப்படைகள் மிகவும் அவசியம்.

ஏனெனில், யோகம் என்றாலே ஆசன பிராணாயாம பயிற்சிகள் என்கிற ஒற்றைத் தன்மை இங்கே கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான மக்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. மேலே இருக்கும் படிநிலையை பார்த்தாலே நமக்கு புரிகிறது, ஆசனம் மற்றும் பிராணாயாமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே என. ஆனால், கடந்த இருநூறு வருடங்களாக மனிதன் உடல் மற்றும் தன் இருப்பு சார்ந்த தேடல்களிலேயே பெரும்பகுதியை செலவழிப்பதாலும், தான் என்பதை உடல் என்றும் அதன் அனுபவம் என்றும் சுருக்கிக்கொள்வதாலும்.

யோகம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகள் என வழங்கப்பட்டு வருகிறது. இது காலத்தின் தேவை என்பதால் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது, ஒரு தீவிர சாதகனுக்கு அல்லது தன்னை வாழ்நாள் முழுவதும் ஒரு முன்னோக்கிய பயணத்தில் ஈடுபடுத்திக்கொள்பவனுக்கு, இந்த மண்ணில் ஒவ்வொரு மரபும் வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டிய பயிற்சிகளையும் பாடத்திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவோ, மூன்று வருடங்களாகவோ, ஆசனப் பிராணாயாம பயிற்சிகள் செய்துகொண்டிருக்கும் ஒருவர் சிறிது சிறிதாக இயம -நியமங்களில் ஈடுபடத்தொடங்கலாம்.ஒரே நேரத்தில் இயம-நியமங்கள் பத்தையும் செய்யத்தொடங்காமல், ஏதேனும் எளிமையான இரண்டிலிருந்து தொடங்கலாம். சந்தோஷமான மன நிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ளுதல் , முடிந்தவரை ஒன்றின் மீது அதீத பற்றும், பிடிப்பும் கொள்ளாதிருத்தல்.

இது ஒரு தொடக்கப்புள்ளி தான் , ஏனெனில் இயம நியமங்கள் பத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை நீங்கள் ஏதேனும் ஒன்றை செய்ய தொடங்கினால் கூட இயல்பாகவே மற்றவை உங்களுக் காய் கூடிடும். அதே போல ஆசன பிராணாயாம பயிற்சிகள் மட்டும் செய்து கொண்டிருக்கும் ஒருவர் குறைந்தது ஒரு வருடத்திற்குள் தனக்கான பிரத்யாகார பயிற்சியை கண்டடைந்து, தொடங்கி விட வேண்டும், ஏனெனில் மேலே சொன்னது போல நாம் படிப்படியாக தியான நிலை நோக்கி செல்வதையே யோக மரபு முழுமையான யோகம் என்கிறது.

ஆக, பிரத்யாஹாரம் அமையாமல் ஒருவர் தாரணைப் பயிற்சிகளில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது அல்லது தாரணை எனும் நிலை வாய்க்காமலே போய்விடலாம்.
தாரணை எனும் நிலை மட்டுமே நம்மை தியானத்திற்கு அழைத்துச்செல்லும்.தியானத்தில் மட்டுமே உங்களுடைய ஒட்டுமொத்த ஆளுமையை நீங்கள் உணர்ந்து கொள்ளவும் ,புரிந்து
கொள்ளவும் முடியும்.இன்று பெரும்பாலான யோக மையங்களில் சொல்லிக்கொடுக்கப்படுவது போல, கண்களை மூடி கையை ஒரு குறிப்பிட்ட முத்திரையில் வைத்து அமர்ந்திருப்பது தியானமல்ல. இங்கே ஒருவர் கண்களை மூடி எதையோ சிந்தித்துக்கொண்டு அல்லது ஏதோ ஒரு எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்பதே முழு உண்மை.

ஆகவே நம்மில் பெரும்பாலோர் இருபது வருடமாக தியானம் செய்கிறேன் அல்லது பத்து வருடமாக தியானம் கற்று வருகிறேன் என்று சொல்வதுண்டு. ஆளுமையில், வாழ்வில், ஏதேனும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா ? என கேட்டால் சொல்லத்தெரியாது அல்லது மனக்கவலைகள் சற்று குறைந்துள்ளது என மிகவும் பலவீனமான ஒரு காரணத்தை சொல்வார்கள். வெறும் மனக்கவலையை குறைப்பது தான் தியானத்தின் நோக்கமென்றால் அதற்கு பதிலாக மனக்கவலையை தீர்க்கக்கூடிய அல்லது தூக்க மருந்து மாத்திரைகள், போன்ற எளிதான ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யலாமே, அதைவிடுத்து பத்து வருடங்கள் ,ஏன் யோக பயிற்சிகளில் மூழ்கவேண்டும்?

எனவே, யோகப் பயிற்சிகள் என்பது உடல் மற்றும் மனக்கவலையை போக்கவல்ல மாற்று மருத்துவ திட்டமல்ல. மாறாக அவை நமது வாழ்நாள் முழுவதும் சென்றுகொண்டே இருக்கக்கூடிய ஒரு வாழ்வியல் பாதை.இந்த பாதை ஒற்றையடி பாதையல்ல, அஷ்டாங்கம் எனும் எட்டு அங்கங்களை கொண்ட வலுவான எட்டுவழிச்சாலை.

ஆகவே ஒருவர் தன்னியல்பு சார்ந்தும் , இன்றைய நிலை சார்ந்தும் இந்த எட்டு படிநிலைகளில் ஓரிடத்திலிருந்து தொடங்கி படிப்படியாக தியான , சமாதி, நிலை நோக்கி செல்லுதல் என்பதே இதன் திட்டம்.ஒரு மரபார்ந்த குருநிலையில் இது குறைந்தபட்சம் பன்னிரண்டு வருட கால பாடத்திட்டமாக இருக்கிறது. இன்று இதே படிநிலைகளில் கற்றுக்கொடுக்கப்படும் யோகக்கல்வி சாலைகள் வெகு சிலவே உள்ளன.நாம் அவற்றை தேடி கண்டு கொள்ளலாம்.

உத்தித லோலாசனம்

இந்த பகுதியில் நாம் ‘உத்தித லோலாசனம்’ எனும் பயிற்சியை காணலாம். படத்தில் இருப்பது போல கால்கள் இரண்டையும் நன்றாக அகற்றி வைத்து, கைகளை மேல்நோக்கி உயர்த்துகையில் மூச்சை உள்ளிழுத்து , வேகமாக மூச்சை வெளியிட்டுக்கொண்டே முன் புறமாக குனிந்து தலைபகுதி இரண்டு கால்களுக்கும் நடுவில் வருவது போல தொங்கிய நிலைக்கு வரவேண்டும். இதில் மூட்டுப்பகுதி மடிக்காமல் இருப்பது அவசியம். இவ்வாறு பத்து முறை செய்யலாம். தொடை பகுதியில் இறுக்கமிருப்பவர்கள் அடிமுதுகு பகுதியிலும் , இடுப்பிலும் இறுக்கமிருப்பவர்கள் நிச்சயமாக செய்யவேண்டிய பயிற்சி இது. சுவாச மண்டலம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு முக்கியமானது.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Selandararajan ,Madurai ,Tirupati ,
× RELATED அன்றாட பயன்பாட்டுக்கான குறிப்புகள்