×

ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் சரக்கு ரயில் தடம் புரண்டது: மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் பெங்களூருக்கு உரம் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெங்களூரு செல்லும் அனைத்து ரயில்களும் ஜோலார்பேட்டை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன. 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் இருந்து உரம் லோடு ஏற்றி கொண்டு சரக்கு ரயில் பெங்களூருக்கு நேற்று புறப்பட்டது. 46 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஒரு பெட்டி தவிர மற்ற பெட்டிகள் அனைத்திலும் உரம் இருந்தது. நேற்றிரவு தர்மபுரிக்கு வந்த சரக்கு ரயிலில் இருந்து சிறிதளவு லோடு இறக்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் பெங்களூருக்கு ரயில் புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள எதிர்கோட்டை என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.10 மணியளவில் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டது. ரயில் இன்ஜின் உள்பட 6 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் அந்த பகுதியில் தண்டவாளத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பெங்களூரு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் 500 பணியாளர்கள் மற்றும் தளவாட பொருட்களுடன் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர். முதற்கட்டமாக சரக்கு ரயிலின் இன்ஜினை தனியாக கழற்றப்பட்டது. பின்னர், ராயக்கோட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த உர மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் சீரமைப்பு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தண்டவாளத்திலும் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சரிசெய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெங்களூரில் இருந்து சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், சேலத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில்களும் ஜோலார்பேட்டை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் அதிகாரிகள், ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 ரயில்கள் ரத்து: ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதால் அவ்வழியாக இயக்கப்படும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம்-யஷ்வந்தபூர் (16212) எக்ஸ்பிரஸ், தர்மபுரி- பெங்களூர் (06551) பயணிகள் ரயில், பெங்களூர்- ஜோலார்பேட்டை (06552), ஜோலார்பேட்டை- பெங்களூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17236) சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டது. பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677) தர்மபுரி, ஓசூர் வழித்தடத்திற்கு பதிலாக கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட்டது. பெங்களூர்-காரைக்கால் (16529) பயணிகள் ரயில் கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம் வழியாக காரைக்காலுக்கு இயக்கப்பட்டது.

The post ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் சரக்கு ரயில் தடம் புரண்டது: மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Rayakkota ,Bangalore ,Rayakkotta ,Raikot ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...