×

‘தட்கல்’ சீட்களை விற்ற விவகாரம்: 5 மாநிலத்தில் 12 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி:‘தட்கல்’ சீட்களை விற்ற விவகாரம் தொடர்பாக 5 மாநிலங்களில் உள்ள 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஒதுக்கப்பட்ட இடங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையானது உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்தது. இந்த சோதனையின் போது, டிஜிட்டல் சாதனங்கள், சட்டவிரோத மென்பொருள் அடங்கிய மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத மென்பொருளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட் உள்ளிட்ட பிற விவரங்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘மென்பொருள் மற்றும் மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ‘தட்கல்’ சீட்களை விற்ற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் 2ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சட்டவிரோத மென்பொருளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், மேற்கண்ட முகவர்களின் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தன.

The post ‘தட்கல்’ சீட்களை விற்ற விவகாரம்: 5 மாநிலத்தில் 12 இடங்களில் சிபிஐ ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,New Delhi ,Tatkal ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லை