×

ஒன்றியத்தில் கூட்டு களவாணி அரசு செயல்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஊட்டி: ஒன்றியத்தில் தற்போது இந்துத்துவம், கார்ப்பரேட் கூட்டு களவாணி அரசு செயல்படுகிறது என ஊட்டியில் மார்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலகிரி மாவட்ட குழு சார்பில் மறைந்த கட்சி நிர்வாகி வி.வி.கிரி பட திறப்பு விழா ஊட்டியில் நேற்று நடந்தது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வி.வி. கிரியின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில்
அவர் பேசியதாவது:கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடியான காலக்கட்டத்தை தற்போது 140 கோடி மக்களும் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். பாஜ ஆள கூடிய உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்தியபால் மாலிக் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தீவிரவாதிகள் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தனர். நம்முடைய தவறால்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணம் என பிரதமரிடம் தெரிவித்தேன். அதற்கு அதனை வெளியில் சொல்ல வேண்டாம் என என்னிடம் தெரிவித்தார் என்று கூறியுள்ளார். ஆனால் இவ்விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் வாய் திறக்கவில்லை.

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தி ேமாதல்களை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வருவது, பதவியை தக்க வைத்து கொள்வது என்ற மதவெறி பிடித்த ஆட்சியை நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ளனர். 2014ல் மோடி பிரதமராகும்போது அதானி உலக பணக்காரர் பட்டியலில் 609 இடத்தில் இருந்தார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் 2022ல் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இது எப்படி சாத்தியம் என அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆய்வு செய்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டது. அதில் மோசடி, விதிமீறல் உள்ளிட்ட பல்ேவறு தகவல்களை தெரிவித்திருந்தது. நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அதானி சம்பந்தமாக வெளிவந்துள்ள அறிக்கை தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேட்டன.

இதனால் அந்த ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் ஆளுங்கட்சியினர் முடக்கினர். ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சுமார் 12 நிமிடத்தில் விவாதமின்றி நிறைவேற்றி விட்டனர்.தற்போது ஒன்றியத்தில் நடக்கக்கூடிய ஆட்சி என்பது இந்துத்துவ ஆட்சியாகவும், மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாகவும் என இந்த இரு சக்திகளும் சேர்ந்த கூட்டு களவாணி அரசு நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒன்றியத்தில் கூட்டு களவாணி அரசு செயல்படுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : G. Ramakrishnan ,Ooty ,Marxist Commune ,Hindutva ,Kalavani government ,Coalition government ,
× RELATED காந்தியை குறைத்து மதிப்பிட்டு...