×

விபத்தை தவிர்க்க புட்லூர் ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம்: பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூருக்கு முந்தைய புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 250க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த புட்லுார் ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக, தினமும், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், அங்காளம்மன் கோயிலுக்கு செல்பவர்கள் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டைக்கு செல்பவர்கள் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டியிருக்கிறது.

சென்னையில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களுக்கு புறநகர் ரயில்கள் செல்லும் நடைமேடை மற்றும் சென்னைக்கு செல்லும் நடைமேடையை இணைக்கும் வகையில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை மேம்பாலம் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே இது பயன்படுகிறது. ஆனால் புட்லூர் ரயில் நிலையம் அருகிலுள்ள அங்காளம்மன் கோயிலுக்கு குழந்தைகள் முதல் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் வந்து இறங்கி செல்கின்றனர். அதுவும் விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதே போல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் புட்லூர் மற்றும் காக்களூர் கிராமத்திற்கு செல்ல வேண்டியவர்களும் இந்த தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த தண்டவாளத்தை கடப்பதால் ஏற்பட்ட விபத்துக்களில் அதிகளவில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே ரயில்வே நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனி வரும் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் உடனடியாக ரயில் பயணிகள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விபத்தை தவிர்க்க புட்லூர் ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Putlur railway station ,Tiruvallur ,Chennai ,Arakkonam ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...