×

கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மே 6,7ம் தேதிகளில் நடைபெறுகிறது-முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

ஊட்டி : கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6,7ம் தேதிகளில் நடைபெறும் 12வது காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் துவங்கியுள்ளது. அதற்கேற்ப மே மாதம் நடக்கும் கோடை விழாவிற்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 6,7ல் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, 12,13,14 ஆகிய தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, 13,14,15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி மே 19 துவங்கி 23 வரை நடைபெற உள்ளது. 27,28ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடக்கிறது. முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6,7ம் தேதிகளில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேரு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று, ரூ.50 லட்சம் செலவில் பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர், டிக்கெட் கவுன்டர், 2 கடைகளும் கட்டப்பட்டது. கழிப்பிடங்கள் புதுப்பிக்கப்பட்டு சுவர்களில் வனவிலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டன. பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையில், நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காய்கறி கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நடந்தது. கூட்டத்திற்கு குன்னூர் ஆர்டிஒ., பூஷணகுமார் தலைமை வகித்து பேசுகையில்: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறி சிற்பங்கள் மற்றும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும். கோத்தகிரியின் பெருமையை உணர்த்தும் வகையில் செல்பி ஸ்டேண்ட் அமைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த தேவையான இடவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றார்.

இக்கூட்டத்தில் கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினர் போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மே 6,7ம் தேதிகளில் நடைபெறுகிறது-முன்னேற்பாடு குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kothagiri ,Kotakiri Nehru Park ,The Vegetable Exhibition ,Kotakiri ,Summer Festival ,
× RELATED பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி...