×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?.. பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!!

சென்னை: தூத்துக்குடி விவகாரத்தில் 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,

இந்தியாவையே ஈர்க்கும் அரசாக உள்ளது திமுக அரசு:

திமுக அரசு இந்தியாவையே ஈர்க்கும் அரசாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தவறுகளை சுட்டிக்காட்டுதாக எதிர்க்கட்சி இல்லை என்றாலும் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை:

குறைகளை கண்டதும் அவை திருத்தப்பட்டதே தவிர, அவற்றை மூடி மறைக்கவோ, குற்றவாளியை தப்பிக்கவிடவோ இல்லை. குற்றங்கள் நடந்ததும் குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்று புகார் இருந்தால் சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.

சாதி, சமய பூசல் இன்றி தமிழ்நாடு அமைதியாக உள்ளது:

தமிழ்நாட்டில் சாதி,சமய பூசல் இன்றி அமைதி நிலவுகிறது. மாநில காவல்துறையினர் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகின்றனர், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்திகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மிகப்பெரிய மோதல் வேகமான நடவடிக்கையால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம். வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பிற மாநிலங்கள் பாராட்டின என முதலமைச்சர் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முதலமைச்சர் கேள்வி

தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் ஆட்சியில் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் கூறவில்லை. முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை, இப்போதும் சொல்லவில்லை என்றார்.

குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே திமுக அரசின் நோக்கம்:

குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே திமுக அரசின் நோக்கம். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. குற்றங்கள் நடந்தவுடன் உடனடியாக வழக்கு பதிந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள், தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாண்டு காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலை உருவாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நிதிநிறுவனங்கள் மோசடி – முதலமைச்சர் எச்சரிக்கை

மக்களிடம் ஆசையை தூண்டி நிதிநிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். நிதிநிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 100 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?.. பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi gunfire ,-day ,G.K. Stalin ,Chennai ,Thoothukudi ,Chief Minister ,-day silent struggle ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...