×

நாகர்கோவில் வடக்கு கோணத்தில் அனந்தனார் கால்வாய் தடுப்பு சுவரை சீரமைப்பதில் தாமதம்- இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகிறது

நாகர்கோவில் : நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள அனந்தனார் கால்வாய் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கோடை காலங்களில் பாசன கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு நிதியும் வழங்கி உள்ளது. கால்வாய்களில் சீரமைப்பு பணி நடப்பதற்கு வசதியாக அணைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைப்பதால், தற்போது கால்வாய்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இந்த கால கட்டத்தை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாருதல், மடைகள் சீரமைப்பு, கால்வாய்கள் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அனந்தனார் சானலில் வடக்கு கோணம் பகுதியில் உடைந்து போன பாசன கால்வாய் கரைகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதால், அந்த பகுதி ெபாதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அந்த பகுதியில் தேவாலயம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. கோணத்தில் இருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த சாலை விளங்கி வருகிறது.

பாசன கால்வாய் கரை உடைந்து கிடப்பதால் பெரும் ஆபத்து அபாயம் உள்ளது. அந்த பகுதியில் வரும் போது வாகனங்கள் லேசாக தடுமாறினாலும் பல அடி பள்ளத்தில் தான் விழும். ராஜாக்கமங்கலம், வட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்த சாலை வழியாக தான் ஆம்புலன்சுகளும் செல்கின்றன.

உடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாயை சீரமைக்க கோரி, ஏற்கனவே பலமுறை பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை மனு அளித்தும் பலன் இல்லை என பொதுமக்கள் கூறி உள்ளனர். விபத்துக்கள், உயிர் பலிகள் நிகழ்ந்த பின் நடவடிக்கை எடுக்காமல் விபரீதங்கள் நிகழும் முன்பே, அந்த பகுதியில் உடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், இது தொடர்பாக அந்த பகுதி மக்களின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

இதில் கால்வாய் கரையை சீரமைக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் கூறினர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்துக்கு வழி வகுக்காமல் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட கரையை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மின் கம்பத்துக்கு ஆபத்து

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், அனந்தனார் கால்வாய் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகில் உள்ள மின் கம்பத்தின் வழியாக உயரழுத்த மின் பாதைகள் உள்ளன. உடைந்து கிடக்கும் பகுதியில் மண் சரிவும் உள்ளது. எனவே மின் கம்பத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் பேரிகார்டு வைத்து இருந்தனர். தற்போது பேரிகார்டை அகற்றி விட்டு சிவப்பு துணியை கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் எந்த பலனும் இல்லை. எனவே உடனடியாக தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்றனர்.

The post நாகர்கோவில் வடக்கு கோணத்தில் அனந்தனார் கால்வாய் தடுப்பு சுவரை சீரமைப்பதில் தாமதம்- இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகிறது appeared first on Dinakaran.

Tags : Anantanar canal ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...