×

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசினர். அப்போது, கோவை மாவட்ட மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி தண்ணீர் கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அட்டப்பாடி அருகே கேரள அரசு அணை கட்ட முயற்சி நடக்கிறது. தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், சில செய்தித்தாள்களில் படங்கள் வெளியாகியுள்ளது. எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அச்சமயம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணைகளை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார். இடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர், இது குடிநீர் ஆதார பிரச்சனை. சிறுவாணிக்கு வரும் தண்ணீரை அணை கட்டினால் தண்ணீர் வராது. சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை பூர்த்தி செய்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர், சற்றுமுன் கிடைத்த தகவல் என குறிப்பிட்டு, 70 மில்லியன் கன அடி வரை நீரை தேக்கும் அளவுக்கு சிறுவாணி அணையின் குறுக்கே கேரள அரசு அணை கட்டியுள்ளது. தமிழகம் – கேரள மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

The post சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Siruvani ,Minister ,Durai Murugan ,Chennai ,Siruvani river ,Duraimurugan ,
× RELATED கோவை மாவட்டம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு