×

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு: எஸ்ஐக்கு பாராட்டு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, பென்னலூர்பேட்டை காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் மா.பரமசிவம், ‘’பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டும்’’ என்று தனது எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ‘’கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பெற்றோர்கள் தான் குற்றவாளிகள். கொலை திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்களை வேண்டுமானால் விட்டுவிடுவேன் குழந்தைகளை பள்ளி சேர்க்கவில்லை என்றால் விடவே மாட்டேன்.

பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், சீருடை, காலை, மதிய உணவுடன் ஐந்து நாட்களும் முட்டை, இரண்டு நாட்கள் மூக்கு கடலை, காராமணி, சுண்டல் என தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே அரசு வழங்கும் சலுகைகளை பெற்றோர்களிடம் தெரிவித்து என்னிடம் வாருங்கள் பிச்சை எடுத்தாவது உதவுகிறேன்’’ என்று உதவி ஆய்வாளர் தெரிவித்தார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பரவியது. இதையடுத்து பல தரப்பிலும் இருந்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதவி ஆய்வாளர் பரமசிவத்தை வெகுவாக பாராட்டினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவன தலைவர் சா.அருணன் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஜான்சன், சுகுனா, அலெக்ஸ், ஷாலின், ஜெகன், ராமமூர்த்தி, ஏழுமலை, இமான் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

The post அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு: எஸ்ஐக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Uthukottai taluk ,Bennalurpet ,Police Station ,Assistant Inspector ,M. Paramasivam ,SI ,Dinakaran ,
× RELATED ஜமாபந்தி நிறைவு விழாவில் 125 மனுக்களுக்கு உடனடி தீர்வு