×

போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

திருப்பூர்,ஏப்.21: திருப்பூர் பல்லடம் ரோடு டிகேடி மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த நால் ரோட்டில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. இங்கு சிக்னல் அமைத்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மூடப்படாமல் இருப்பதால், பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் இன்றியும், சிக்னல் செயல்படாமல் இருப்பதாலும் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு மாதத்துக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ள எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும். பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்க வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமித்து, வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Palladam Road ,TKD Mill Bus Stand ,Nal Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு