×

மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணை பணியை விரைந்து முடிக்க கம்பம் பகுதி விவசாயிகள் கோரிக்கை

 

கூடலூர், ஏப். 21: பெரியாறு அணையில் இருந்து ரூ.1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும், புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கூடலூர் குருவனூற்றுப்பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய்மூலம் தண்ணீர் கொண்டு செல்ல மதுரை மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வண்ணான் துறை பகுதியில் தடுப்பு அணை கட்டும் பணிகள் கடந்த சில நாட்களாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் தடுப்பணை கட்டும் பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் அனையில் இருந்து ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் தடுப்பணை பணிகள் இன்னம் ஒருமாததத்தில் முடிக்காவிட்டால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாநகராட்சி துறையினர் வண்ணான் துறை பகுதியில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தடுப்பணையை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணை பணியை விரைந்து முடிக்க கம்பம் பகுதி விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kudalore ,Periyaru ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது