×

நூறு நாள் வேலைத்திட்டப்பணிகளை கண்காணிக்க டிஆர்ஓ தலைமையில் தனிப்பிரிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை கண்காணிக்க டிஆர்ஓ தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தவும், மரக்கன்றுகளை நடும் பணியை ேமற்கொள்ள வேண்டுமென்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தாருகாபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளுக்கான பொறுப்பாளர் 90 நாட்களையும் கடந்து, கடந்த 7 மாதமாக பணியில் தொடர்கிறார். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் தனிநபர் விவசாய நிலத்தில் வேலைகள் நடக்கின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் விசாரித்தனர். அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘நூறு நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயனாளிகள், வேலையை செயல்படுத்துதல், கண்காணித்தல், தணிக்கை உள்ளிட்டவை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் வருகைப்பதிவேடும், பணியும் பதிவேற்றம் செய்யப்பட்டு, சரிபார்த்த பிறகே சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். என்எம்எம்எஸ் திட்டப்படி பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் புகார் குறித்து கலெக்டர் 12 வாரத்திற்குள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்எம்எம்எஸ் திட்டப்படி அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் திட்டப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். என்எம்எம்எஸ் செயலியில் பணியாளர் வருகைப்பதிவேட்டை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் அடிப்படையில் பணம் வழங்கும் திட்டப்படி ஆன்லைனில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறிலின்றி முறையாக பணிகள் நடப்பதை உறுதி செய்திடும் வகையில் அவ்வப்போது கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூறு நாள் திட்ட பணிகள், பயன்கள் குறித்து அனைவரும் அறிந்திடும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மரக்கன்றுகள் நடுவது, ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை நூறு நாள் திட்டத்தில் மேற்கொள்ளலாம். திட்டப்பணி விபரத்தை ஊரக வளர்ச்சித்துறையின் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். நூறுநாள் திட்ட பணிகளை கண்காணிக்கவும், புகார்களை விசாரிக்கவும் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். இதில், டிஆர்ஓ தகுதிக்கு குறையாதவரை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டுமென கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை செயலர் 12 வாரத்திற்குள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

The post நூறு நாள் வேலைத்திட்டப்பணிகளை கண்காணிக்க டிஆர்ஓ தலைமையில் தனிப்பிரிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TRO ,Madurai ,
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...