×

இலை அணியில் நடக்கும் சண்டையை பயன்படுத்தி அடைக்கலமானவரு எம்பியாக முயற்சிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பிளாக்கில் பறிமுதல் செய்யப்படும் டாஸ்மாக் சரக்குகள் என்ன ஆகுது…’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் மொத்தம் 90 டாஸ்மாக் கடைகள் இருக்காம். 12 மணி முதல் 10 மணி வரை வழக்கம்போல கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து பிளாக்கில் கூடுதல் விலைக்கு சரக்குகள் விற்கப்படுவதை மதுவிலக்கு காக்கிகளும், அந்தந்த பகுதி ஸ்டேஷன் காக்கிகளும் மப்டியில் ரகசியமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகிறார்களாம். அப்படி பறிமுதல் செய்யப்படும் சரக்குகள் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுமாம். பிளாக்கில் கூடுதல் விலைக்கு விற்கும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது அவ்வப்போதும் வழக்கும் பதிவு செய்றாங்களாம். ஆனாலும், மதுவிலக்கு பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய அழகு என்பவர், மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்கப்படும் சரக்குகளை பறிமுதல் செய்வதோடு, அந்த சரக்குகளை தனக்கு மேல் உள்ள அதிகாரியிடம் குறைவாக கணக்கு காட்டி வருகிறாராம். மீதி உள்ள சரக்குகளை பிரபல ஓட்டலில் இரவோடு இரவாக ஒப்படைப்பாராம். அதற்காக, அவருக்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவதால கரன்சியில தான் மிதக்கிறாராம். வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த தகவல் உயரதிகாரிகளின் கவனத்திற்கு ஆதாரத்துடன் சென்றுள்ளதாம். இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயக்கூடும் என அந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட சக காக்கிகளுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம். இந்த தகவல் தெரிய வந்ததும் காக்கி அதிகாரி தற்போது ‘கிலி’யில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூவத்தூர், தேனிக்காரர் என்ற அரசியல் கூட்டுக்குள் யார் மாறி மாறி அடைக்கலமானது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளராக சேலத்துக்காரரை அங்கீகரிச்ச வேகத்துல மாஜி ‘ரெட்ஹில்ஸ்’ பூரிச்சுப் போயிட்டாராம். மண்டையை பொளக்கும் வெயிலிலும் வெளியே ஓடி வந்து, எங்களது தலைமைக்கு யாரும் எப்போதும், எந்நேரமும் எதிர்ப்பு என்பதே கிடையாதுன்னு சொன்னாராம். ஆனா கூவத்தூரில் முதல் எதிர்ப்பே இந்த ரெட்ஹில்ஸ் தானாம். டேம் தொகுதியில போட்டியிட சீட் கொடுக்காம ஏமாற்றியதால் மனசுக்குள் இருந்த சினத்தை வெளியே கொண்டுவந்த அவர், அந்த இருக்கைக்கே இழுக்குன்னு சொல்லிக்கிட்டு அடைபட்டிருந்த கூவத்தூர் கூண்டுக்குள்ளிருந்து வெளியே ஓடிவந்தார். பின்னர் அப்படியே தேனிக்காரரின் கூட்டுக்குள்ள அடைக்கலமாகிட்டார். அங்க எதிர்பார்த்தது நடக்கலைங்குற சூழ்நிலை வந்ததும், அங்கிருந்து நைசா சேலத்துக்காரரிடம் ஒட்டிக்கிட்டார். இந்த விவகாரத்தை வெளியே சொல்லும் இலை கட்சியினர் ஆதாயம் இல்லாமல் ஆத்தோட போவாங்களான்னு ஒரு கேள்வியையும் முன் வைக்கிறாங்க. இந்த ரெட்ஹில்ஸ் பார்க்காத பதவியே இல்லையாம். இதுல, இனிமேல் போட்டிப்போட்டு எந்த பதவிக்கும் போகும் எண்ணமே இல்லைன்னு சொல்லிட்டாராம். ஆனாலும் என்னோட தகுதியையும், அனுபவத்தையும் பார்த்து எதைக் கொடுத்தாலும் வாங்கிக்குவேன்னு சொல்லிக்கிட்டிருக்காராம். அதுவும் மீண்டும் ஒருமுறை எம்பியாகனுமுன்னு ஆசையா இருக்காம். இதுக்குத்தான் இத்தனை தட்டு தட்டுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க…’’ என்றார்.

‘‘பணியிட மாற்றம் செஞ்ச ஏரியாவுக்கு போகமாட்டேன்னு யார் இவ்வளவு தைரியமாக சொல்றாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்தில் ஆறுகாடான ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல, 39 பஞ்சாயத்து இருக்குது. இதுல, 35 பஞ்சாயத்துக்கும் நிரந்தரமாக செகரட்ரிங்க இருக்காங்க. 4 ஊராட்சிகளுக்கு இன்சார்ஜ் செகரட்ரிங்கதான் பணிபுரிஞ்சு வர்றாங்க… கடந்த மாசம் 18 பஞ்சாயத்து செகரட்ரிங்கள, பணியிடமாற்றம் செஞ்சி பிடிஓ உத்தரவு போட்டாராம். ஆனா, இந்த உத்தரவை ஒரு சில பஞ்சாயத்து செகரட்ரிங்கதான் பின்பற்றி பணியிடமாற்றம் செஞ்ச இடத்துக்கு போனாங்களாம்… மற்ற யாரும் பணியிடமாற்றப்பட்ட ஏரியாவுக்கு போகவே இல்லையாம்.. பணியிட மாற்றம் செய்த பஞ்சாயத்து செகரட்ரிங்களும் அங்கிருந்து, எங்களையும் பணியிட மாறுதல் செய்யணும்னு பிடிஓவை நச்சரித்து வர்றாங்களாம்… இதுல ஒரு சில ஊராட்சி பிரசிடெண்ட்டுகள் எங்களுக்கு பழைய செகரட்ரிகளே வேண்டும், புதிதாக வந்தவங்க எங்களுக்கு தேவையில்லைன்னு சொல்லி நச்சரிக்குறாங்களாம். இதனால, ஆறுகாடுல இருக்குற பஞ்சாயத்துக்கள்ல, பணிகள் பாதிக்கப்படுதாம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்னு கோரிக்கைகளுக்காக சென்று ஏமாற்றத்தோட திரும்புற ஜனங்க கோரிக்கை வச்சிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அந்த 100 கோடி சொத்து மேட்டரை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவிலில் ₹100 கோடி மதிப்புள்ள சொத்து விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில் வருவாய் துறை இந்த விஷயத்தில கோட்டை விட்டுருச்சுன்னும் இதற்காக உயர் மட்ட நிலையில் உள்ள அதிகாரிகள் பல கோடிகளை கறந்துவிட்டதாகவும், இனி இது தொடர்பாக மேல் நடவடிக்கைக்கும் தயாராக மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடைசி வரை போராடிய அமைப்பும் அதிகாரிகள் மீது சந்தேகத்தை எழுப்புவதோடு இதனை சும்மாவிடப் போவதில்லை என்றும் வரிந்துகட்ட தொடங்கியுள்ளனர். அரசுக்கு இழப்பு ஏற்பட்ட பின்னணியில் அதிகாரிகள் உள்ளார்களா என லஞ்ச ஒழிப்பு துறையும் இந்த விவகாரத்தில் மோப்பம் பிடிக்க தொடங்கியுள்ளது…’’ என்றார் விக்கியானந்தா

The post இலை அணியில் நடக்கும் சண்டையை பயன்படுத்தி அடைக்கலமானவரு எம்பியாக முயற்சிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,MB ,Yananda ,Tasmac ,Peter ,Textiles ,Leaf Squad ,wiki ,
× RELATED அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை...