×

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தாக்கல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்திய அடையாறு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர். அவர் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஹரி பத்மன் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை சைதாபேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளனர். உள்நோக்கத்துடன் உரிய விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

The post பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தாக்கல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Haripadman ,Chennai ,Rukmini Arundel College ,Kalashetra Trust Campus ,Thiruvanmiyur ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...