×

ஈகோ அரசியல்

மக்கள் செல்வாக்கு பெற்ற அதிமுகவில் ஒற்றை தலைமை போட்டியால் ஜனநாயக கேலிக்கூத்து அரங்கேறி வருகிறது. நீதிமன்ற உத்தரவு சாதகமாக வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகள் செல்லாது என்று அறிவிக்க கோரி தனது தரப்பில் மெஜாரிட்டி நிர்வாகிகள் இல்லாமல் ஓபிஎஸ் தனியாக வழக்கு மீது வழக்கு தொடர்ந்து வருகிறார். இதனால் இரு தலைவர்களுக்குள் ஈகோ முற்றி அரசியல் களம் அமர்க்களப்படுகிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அதிமுக வேட்பாளரை அறிவித்தார். அதே போல் ஓபிஎஸ்சும் அறிவித்தார். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டது. திடீரென்று ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்பபெற்றார். இருந்தாலும் தேர்தலில் எடப்பாடி நிறுத்திய அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் தாங்களே உண்மையான அதிமுக என்று நிரூபிக்க வசதியாக கர்நாடக மாநில தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகரில் அன்பரசனை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. ஓபிஎஸ் சும்மா இருப்பாரா.. நானும் அதிமுக தான் என்று முத்திரை பதிக்கும் வகையில் புலிகேசி நகர் தொகுதியில் தனது அணி சார்பில் நெடுஞ்செழியன், தங்கவயலில் ஆனந்த்ராஜ், காந்திநகரில் குமாரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் போட்டி போட்டு வேட்பாளர்களை கர்நாடக மாநில தேர்தலில் நிறுத்தியுள்ளனர்.

எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்ட நிலையிலும் ஓபிஎஸ் வீம்புக்கு போட்டி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதற்கு ஈகோ தான் காரணம். ‘கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன்’ என்று சொன்ன கதையாக இவர்களது இருவரின் நடவடிக்கையும் இருக்கிறது என்கின்றனர் மக்கள். கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் தமிழர்கள் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த தொகுதியில் பாஜவுக்கு பெரிய ஆதரவு கிடையாது. காங்கிரசின் வெற்றிக்கோட்டையாக இதுவரையிலும் இருக்கிறது.

இப்படி இருக்கையில் தமிழராக இருந்தாலும் அதிமுக வேட்பாளருக்கு எப்படி வாக்களிப்பார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தும் அதிமுக எம்எல்ஏக்களால் எந்த வளர்ச்சி பணிகளையும் தொகுதியில் செய்து தரமுடியாத நிலையில், கர்நாடக மாநிலத்தில் இவர்களால் அந்த தொகுதிக்கு என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அதிமுகவுக்கோ, எடப்பாடிக்கோ அது பெருமையாக இருக்கலாமே தவிர கர்நாடக தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று அத்தொகுதி தமிழ் மக்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். அது சரி, அதிமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் பாஜ வாக்குகளை பிரித்து காங்கிரசின் வெற்றியை எளிதாக்கட்டும்.

 

The post ஈகோ அரசியல் appeared first on Dinakaran.

Tags : Democratic ,
× RELATED பெரம்பலூரில் ரயில்வே திட்டம்...