கூடுவாஞ்சேரி: சென்னை, கோயம்பேடு, செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா வரை 100க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் இயங்கி வரும் அண்ணா உயிரியல் பூங்கா அருகிலேயும், அதன் எதிரிலேயேயும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், பயணிகளின் வசதிக்காக நிழற்குடை இல்லை. இதனால், பூங்காவுக்கு சென்னை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் பஸ் ஏறும்போதும், இறங்கும்போதும் காத்திருப்பதற்காக பேருந்து நிழற்குடை இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இங்கு வந்து திரும்பும் மாநகர பேருந்துகளை நிறுத்துவதற்காக பஸ் நிலையம் இல்லை. இதனால், நடுரோட்டிலேயே பேருந்துகளை நிறுத்திவிட்டு மணி கணக்கில் ஓட்டல்களில் சாப்பிட டிரைவர்கள் சென்று விடுகின்றனர். இதனை அங்கு இருக்கும் டைம் கீப்பரும் கண்டு கொள்வதில்லை. இதனால் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பேருந்துகள் மற்ற வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவியாய் தவித்து வருகின்றன. மேலும், வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் வரும் பேருந்துகள் மற்ற வாகனங்களும் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முட்டி மோதி நிற்கின்றன.
இதனால், டிரைவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், இங்கு மேம்பாலங்களை அமைத்த அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்துவதற்காக பஸ் நிலையம் அமைத்து தரவில்லை. இதனால், குறித்த நேரத்திற்கு சென்று வரமுடியாமல் பள்ளி மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post வண்டலூரில் பஸ் நிலையம் இல்லாததால் நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.