×

ஏப்ரல் 24ம் தேதி இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

சென்னை: ஏப்ரல் 24ம் தேதி இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ – கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட “குடக்கோச்சேரல் இளங்கோ” என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ் அன்னைக்கு நூற்சிலம்பு அணிவித்த பெருமை இளங்கோவடிகளைச் சாரும். குலத்தாலும் – குணத்தாலும், அரசியல் நெஞ்சம் வாய்ந்த ஒரு புலவர், காப்பியம் இயற்றினார் என்றால் சிலப்பதிகாரத்தின் சிறப்புக்கு வேறென்ன மாண்புகள் வேண்டும்.

“திங்களையும் – ஞாயிற்றையும் – மழையையும் – புகாரையும் போற்றுவோம் வாரீர்” என்று அழைக்கின்றார் இளங்கோவடிகளின் சிலம்பின் தொடக்கமே நாட்டுப்பாடலாக ஒலிக்கின்றது. புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற தலைப்புக்களும் நாட்டு உணர்வைப் பெருக்குகின்றன ; நமக்குச் சிலப்பதிகாரம் பலவற்றை உரிமையாக்குகிறது. இளங்கோவடிகள் தந்துள்ள சிலப்பதிகாரம் “முத்தமிழ்க்காப்பியம்” எனப் பெயர்பெற்றது. இயற்றமிழான உரைநடைப் பகுதிகளான – இசைத்தமிழான பாடல் தொகுப்புக்களாகவும் காப்பியம் முழுவதுமே நாடக நூல் என்று புலவர் உலகமும் – நாடகக் கலைஞர் உலகமும் ஒருமனதுடன் ஒப்புக்கொள்ளும் உண்மையுடையதாக பொலிகிறது. தமிழ், இயல் – இசை – நாடகம் என்ற மூன்று கூறுகளைக் கொண்டது என்பது சிலப்பதிகாரத்தின் மூலம் தான் முதன்முதலில் உலகுக்கு அறிமுகமானது.

அதற்கும் பின்னர் தான் “முத்தமிழ்” என்னும் சொல் புலவர் உலகில் வழக்கிற்கு வந்தது. தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. 1892 இல் முதன்முதலாகச் சிலப்பதிகாரம் முழுவதையும் உரைகளுடன் வெளியிட்டார். தமிழில் தோன்றிய ஆதி காவியம் என்ற தனிப்பெருமை சிலப்பதிகாரத்துக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமையாகும். பூம்புகாரைப் புதுக்கியவர், கடற்கரையில் கண்ணகியை மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியவர் என்ற பெருமைக்கெல்லாம் உரிமை பூண்ட தமிழ்நாடு அரசின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னை, அண்ணா சதுக்கத்தில் 07.11.1971இல் சேரன் தம்பி இளங்கோவடிகளுக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெஞ்சில் நிலைபெற்றுவிட்ட சிலப்பதிகாரம் அழகிய உரைநடை நாடகமாய் அவரால் ஆக்கப் பெற்றுள்ளது என்பதை தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

இத்தகைய சிறப்பு மிக்க இளங்கோவடிகளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் 24ஆம் நாளன்று சென்னை அண்ணா சதுக்கத்திலுள்ள இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 24.04.2023 திங்கள் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வணக்கத்திற்குரிய மேயர், வணக்கத்திற்குரிய துணை மேயர், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

The post ஏப்ரல் 24ம் தேதி இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvuruvuka ,Chennai ,Thiruvuruva ,Chancellors ,Chancellor Kulatharu ,of Thiruvaruva ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்...