×

நான் முதல்வன் புதுமைப்பெண் போன்ற திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வால்பாறை அமுல் கந்தசாமி(அதிமுக) பேசுகையில், வால்பாறையில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க அரசு முன்வர வேண்டும். மேலும் கேரள எல்லை வரை விரிந்துள்ள வால்பாறை தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, 100 கி.மீ பயணித்து செல்ல வேண்டி உள்ளதால் ஏழை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் படிப்பதற்கு பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “கடந்த திமுக ஆட்சியில் 2006ல் வால்பாறை தொகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனாலும் அங்கும் பல இடங்கள் காலியாக உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளை பொறுத்த வரை கடந்த 2010-11ல் அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் 1,16,687 பேர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, 2020ல் 59, 350 ஆக குறைந்தது.திமுக ஆட்சி பொறுப்பற்று இரண்டு ஆண்டுகளில், நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவதால், 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 2022-ல் 1,20,090 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

மேலும் தொழில் துறை 4.0 தரத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைத்து கல்லூரிகளிலும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 618 கோடி வரை வருடத்திற்கு செலவாகிறது. உறுப்பினரின் கோரிக்கை குறித்து வருங்காலத்தில் நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்” என்றார்.

The post நான் முதல்வன் புதுமைப்பெண் போன்ற திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nan ,Pudumaippen ,Higher Education Minister ,Ponmudi ,Chennai ,Valparai ,Amul Kandasamy ,ADMK ,Legislative Assembly ,
× RELATED ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ரயில்வே, வங்கி பணிகளுக்கு இலவச பயிற்சி