×

தந்தை இறந்த வேதனையிலும் கண்ணீருடன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி: திருவொற்றியூரில் உருக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இறந்த தந்தையின் உடல் வீட்டில் இருக்கையில் கண்ணீருடன் 10ம் வகுப்பு தேர்வை மாணவி எழுதியது அனைவரின் நெஞ்சத்தையும் உருக்கியது. சென்னை திருவொற்றியூர் மேட்டுப்பாளையம் 1வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(57). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவானி (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் ஜெயலட்சுமி, அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது இவர் பொது தேர்வு எழுதி வருகின்றார்.

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மூர்த்தி நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் உடலை பார்த்து ஜெயலட்சுமி கதறி அழுதுகொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் தோழிகள் ஆகியோர் ஆறுதல் கூறியதுடன் “தேர்வை கண்டிப்பாக எழுதுவாய்’’ என்று தைரியம் கொடுத்தனர். இருப்பினும் நேற்று முழுவதும் தந்தையின் சடலம் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத ஜெயலட்சுமி, இன்று காலை தைரியத்துடன் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை தந்தையின் சடலத்ைத அடக்கம் செய்யாமல் உறவினர்கள் காத்திருந்தனர்.

முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவி ஜெயலட்சுமிக்கு ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் ஆறுதல் கூறியதுடன் தயக்கமின்றி தேர்வை எதிர்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாணவி தேர்வை எழுதி முடித்ததும் மீண்டும் தேம்பி, தேம்பி அழுதுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறியதுடன் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இதன்பிறகு மூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தந்தை இறந்த வேதனையிலும் கண்ணீருடன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி: திருவொற்றியூரில் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Urukkam ,Thiruvottiyur ,Tiruvotiyur ,
× RELATED படம் பார்க்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: ரிஷப் ஷெட்டி உருக்கம்