×

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு: பராமரிப்பின்றி கிடப்பதால் சீரமைக்க வலியுறுத்தல்

தேன்கனிக்கோட்டை: தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான 89 நடுகற்கள் ஒரே இடத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகில் கூலிச்சந்திரம் என்ற ஊரில், தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக எண்ணிக்கையிலான 89 நடுகற்கள் இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவை சார்ந்த அறம் கிருஷ்ணன், மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா ஆகியோர் கண்டறிந்தனர். தமிழக நடுகற்கள் வரலாற்றில் அதிக நடுகற்கள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நடுகற்கள் தொகுப்பு இருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான். இம்மாவட்டத்தில் 8ம் நாற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொடர்ச்சியாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றன.

கெலமங்கலத்திலிருந்து பாரந்தூர் போகும் சாலையில் பயணம் செய்தால் எச்.செட்டிப்பள்ளி வருகிறது. இங்கிருந்து வலது பக்கம் திரும்பி 5 கி.மீட்டர் பயணம் செய்தால் கூலிசந்திரம் என்ற சிற்றூர் வருகிறது. பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பண்டிகை செய்யும் பொது இடத்தில் இந்த 89 நடுகற்களும் சிதறிக்கிடக்கின்றன. இங்கு சிவன் கோயில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. நடுகற்கள் தொகுப்பு என்பது இம்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. ஓசூர் தேர்பேட்டையில் -20, தளி அருகே நாகொண்ட பாளையம் 45 ,பேரிகைக்கு அருகே சிங்கிரிப்பள்ளியில் -74, தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளியில் -48, பாகலூருக்கு அருகே குடிசெட்லு -25, ஓசூர் அருகில் கொத்தூரில்-28, ஒன்னல்வாடியில் -24, உளிவீரனள்ளியில் -32, காவேரிபட்டணம் அருகே பெண்ணேஸ்வரமடத்தில் 25க்கும் மேல் நடுகற்கள், சின்னகொத்தூரில் 25க்கும் மேல், தொகரப்பள்ளிக்கு அருகில் 15க்கும் அதிகமான அதியமான் நடுகல் தொகுப்பு என 25க்கும் மேற்பட்ட இடங்களில் 10 தொடங்கி 89 நடுகற்கள் வரை இருக்கின்றன.

கூலிசந்திரத்தில் மொத்தமாக 89 நடுகற்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் அனைத்தும் குறும்பர் இனமக்கள் வழிபடும் 14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள். ஒரே இடத்தில் எந்த வகையான பராமரிப்பும் இன்றி சிதறிக்கிடக்கின்றன. இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலின் பிராதன வளாகம் சுற்றியும் வரிசையாக வைத்து பராமரிக்கும் நோக்கில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்று பொக்கிஷமான இவற்றை பாதுகாக்கும் பொருட்டு அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பாக ₹25 ஆயிரம் ஊர் மக்களிடம் வழங்கப்படுள்ளது.

The post தமிழகத்தில் முதன்முறையாக ஒரே இடத்தில் 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு: பராமரிப்பின்றி கிடப்பதால் சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dhenkanikottai ,Koolichandram ,Kelamangalam, Krishnagiri district ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு