×

குஜிலியம்பாறையில் ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலை தொட்டி கட்ட நடவடிக்கை: பாளையம் பேரூராட்சி தலைவர் தகவல்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் குடியிருப்பு மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு, ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார். பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குஜிலியம்பாறையில் 8, 11, 12, 13 ஆகிய 4 வார்டுகள் உள்ளது. இதில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக கடந்த 1996ம் ஆண்டு பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால், இந்த தொட்டியின் தூண்கள் மற்றும் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.

நாளடைவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கான்கிரிட் தூண்களில் விரிசல் விடத் தொடங்கி, பின்னர் சிமிண்ட் கலவைகள் பெயர்ந்து தற்போது கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்தபடி வலுவிழந்து உள்ளது. இடிந்து விழும் என்ற நிலையில் தொட்டி உள்ளதால், இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தான், குஜிலியம்பாறை மக்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சிதிலடைந்த இந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்டித் தர வேண்டும் என கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு கிடப்பில் போட்டது. தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்றி, ரூ.35 லட்சத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்படும் என பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘‘குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு, 8,11,12,13 ஆகிய 4 வார்டு மக்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த தொட்டி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை முற்றிலுமாக இடித்து அகற்றி புதிய மேல்நிலை தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அவர், விரைவில் புதிய மேல்நிலை தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கூறுகையில், ‘‘பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் ரூ.35 லட்சம் செலவில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு, விரைவில் புதிய மேல்நிலை தொட்டி கட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.

The post குஜிலியம்பாறையில் ரூ.35 லட்சத்தில் புதிய மேல்நிலை தொட்டி கட்ட நடவடிக்கை: பாளையம் பேரூராட்சி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Palayam Municipality ,Kujiliyamparai ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு