×

இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோரிய மனு தள்ளுபடி: விளம்பரத்துக்கு தொடரப்பட்டதாக நீதிபதிகள் கருத்து

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சாலை விபத்துகளில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. விபத்து காலத்தில் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நேரத்தில் உடனடி சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் மூலமான ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசால் “சஞ்சீவனி சேவா” திட்டம் மூலமாக ஏர் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதால் கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 100 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் சாலை மார்க்கமாக உறுப்புகளை கொண்டு செல்வதில் அதிக ஆபத்து உள்ளது. போக்குவரத்து குறுக்கீடு மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை முதல் 2 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால், இலவச ஏர் ஆம்புலன்சுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இயக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவை உள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல், விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோரிய மனு தள்ளுபடி: விளம்பரத்துக்கு தொடரப்பட்டதாக நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Free Air Ambulance Service ,Chennai ,Aiya ,Tirunelveli ,India ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...