×

இறுதிகட்டத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கு 6 பேரிடம் மட்டுமே விசாரிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேரிடம் மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிஐ தெரிவித்து உள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் தர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிபிஐ வக்கீல் முத்துசரவணன் ஆஜராகி, ‘‘கொலையான இருவரும் மனுதாரர் மற்றும் காவலர்களால் லத்தியால் தொடர்ச்சியாக அதிகாலை 3 மணி வரை கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறைகளை கழுவி அகற்றுமாறு மனுதாரர் தான் கூறியுள்ளார். அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் தான் இருவரும் இறந்தனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஐகோர்ட் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் 4வது முறையாக மீண்டும் மனு செய்துள்ளார்.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2021 முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கும் வகையில் விரைவாக முடிக்க வேண்டியுள்ளது. முக்கிய சாட்சியங்கள் ஓரிரு நாளில் முடிந்த நிலையில் குறுக்கு விசாரணை மட்டும் பல நாட்கள் நடத்தப்பட்டது. ஒரு முழு வேலை நாள் போதுமானதாக இல்லை. 2 அல்லது 3 நாட்கள் தேவைப்படுகிறது. இதனால், வாரத்தில் 3 நாள் வரை வழக்கு விசாரணை நடக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கும் வகையில் விசாரணை நடந்தாலும், மனுதாரர் உள்ளிட்டோரின் அடுத்தடுத்த மனுக்களால் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது.

மொத்தமுள்ள 132 சாட்சிகளில் 47 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இன்னும் 6 பேரிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பே வழக்கை இழுத்தடிக்கும் வகையில் செயல்படுகின்றனர். இன்னும் 4 மாதத்தில் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனுதாரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்படலாம். விசாரணையும் பாதிக்கும். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்.

The post இறுதிகட்டத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கு 6 பேரிடம் மட்டுமே விசாரிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,CBI ,Madurai High Court ,Madurai ,Shathankulam ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது