×

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு கோயில் சார்பில் 4 கிராம் பொன் தாலி: திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, கோவை, கோயில்களுக்கு ரோப் கார் வசதி; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு நடப்பாண்டு முதல் 4 கிராம் பொன் தாலி கோயில் சார்பில் வழங்கப்படும். பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 249 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை,

  • ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும்.
  • தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களான அம்மன், அய்யனார், ஏழு கன்னிமார்கள் போன்ற திருவுருவங்களை பாதுகாத்து சீரமைக்கும் பணி முதற்கட்டமாக 6 கோயில்களில் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 கோயில்களில் ரூ.25.98 கோடியில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.
  • 32 கோயில்களின் குளம் ரூ.10.04 கோடியில் சீரமைக்கப்படும்.
  • திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் கோயில்கள் ரூ.7 கோடியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
  • வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 3 நாள் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  • நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 8 கோயில்களில் நடைபெற்று வருகிறது. தற்போது மேலும் 3 கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேலும் 7 கோயில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும்.
  • கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் நடப்பாண்டு முதல் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி கோயில் சார்பில் வழங்கப்படும்.
  • தற்போது 15 ஆயிரம் கோயில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூசைத் திட்டம் மேலும் 2 ஆயிரம் கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.
  • ஒரு கால பூசை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேற்படிப்பு நலன் கருதி ஆண்டுதோறும் 400 வழங்கிட தனியாக ஒரு மைய நிதி ஏற்படுத்தப்படும்.
  • ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4000 உயர்த்தி வழங்கப்படும்.
  • நடப்பாண்டு முதல் கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ஆயிரம் ரூபாய்.
  • கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக கோயில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6 ஆயிரம் மாத ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.
  • மயிலாப்பூர், திருவள்ளுவர் கோயிலில் ரூ.15 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் திருத்தேர் ரூ.3.95 கோடியில் உருவாக்கப்படும்.
  • திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாட சிறப்பு நடைபாதை ரூ.50 இலட்சத்தில் அமைக்கப்படும்
  • சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ,மதுரை கள்ளழகர் கோயில் ஆகிய 5 கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ரூ.200 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருத்தணியில் ரூ.3 கோடியில் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும்.
  • ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் சார்பாக, திருமலையில் பக்தர்களுக்கு கூடுதலாக தங்கும் விடுதி ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவாகத் தரிசனம் செய்யும் பொருட்டு தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
  • பக்தர்கள் பெருவாரியாக வருகை புரியும் திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியகோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி ஏற்படுத்தப்படும்.
  • இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப்பிரிவின் வாயிலாக முதற்கட்டமாக 108 அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. இவ்வாண்டு மேலும் 108 அரிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்படும்.
  • நாமக்கல், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சார்பாக அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி புதிதாக தொடங்கப்படும்.
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் வசதி ரூ.32 கோடியிலும், கோவை மாவட்டம் சுப்பிரமணிசாமி கோயிலுக்கு ரூ.14 கோடியிலும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.12.05 மதிப்பிலும், திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.8.17 கோடி மதிப்பிலும் ரோப்கார் வசதி செய்யப்படும்.
  • திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருச்செங்கோடு கோரக்குட்டை இளையபெருமாள் கோயிலில் ரோப் கார் வசதி அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு கோயில் சார்பில் 4 கிராம் பொன் தாலி: திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, கோவை, கோயில்களுக்கு ரோப் கார் வசதி; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Tiruneermalai ,Palani ,Coimbatore ,Minister ,Shekharbabu ,Chennai ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...