×

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில்,‘‘அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும். அதேப்போன்று கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.

மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என கடந்த 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது நாளையோடு முடிவடையுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ஆணையர்கள் முன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில்,‘‘கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் அதிமுக தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைத்தமைக்கு ஆணையம் உடனடியாக ஏற்க வேண்டும். அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அங்கீகரிக்க வேண்டும்.

இதில் கால தாமதம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கோரிக்கையையும் தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்து கொண்டனர். இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனைகளை நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அதிமுக கட்சி, பொதுக்குழு, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எடப்பாடிக்கு எதிராக புதிய வழக்கு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கில், ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அதை மறைத்து தான் எடப்பாடி பழனிச்சாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரியும், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்கக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிக்கக் கூடாது என கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளேன். ஆனால் ஆணையத்தின் தரப்பில் தற்போது வரையில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எனது தரப்பு கோரிக்கையை கருத்தில் கொண்டு அதுகுறித்து என்னிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு தான் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வேண்டும். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முடிவு நிறுத்தி வைப்பு?
    அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஆலோசனை செய்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதுகுறித்த அறிவிப்பை நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதன் இறுதி உத்தரவுக்கு பின்னர் தான் ஒரு முடிவான அறிவிப்பை வெளியிட முடியும் என ஆணையம் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

The post அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,AIADMK ,New Delhi ,Chief Election Commission of India ,AIADMK General ,General Committee ,Delhi ,General ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...