×

பதவி ஆசைகாட்டி பசையான நிர்வாகிகளிடம் கரன்சி கறந்த இலை கட்சியின் நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பதவி கிடைக்காத வெறியுடன், பணம் இழந்த பரிதாபத்தில் இருப்பது யாரு…’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவரான சேலத்துக்காரரின் மாவட்டத்துல தொண்டர்கள், பண பலம் படைத்த நிர்வாகிகள் ஹாப்பியா இருக்காங்க. கட்சி ரெண்டா உடைஞ்சப்போ இந்த மாங்கனி ஊருல மாஜிக்கு பாதிக்கு பாதிபேர் எதிராகவே இருந்தாங்க. அதன்பிறகு சமரசமான நிலையில், எதிரானவர்களை தூக்கிட்டு புதிய பொறுப்பு போடப் போறாருன்னு சொல்லி சொல்லியே வைட்டமின் ‘ப’ வை நிழலின் நிழல்கள் பணத்தை கறந்துட்டாங்க. இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லகரங்களை கறந்துட்டாங்களாம். இவர்களை நம்பி பல லகரங்களை கொடுத்து ஏமாந்தவங்க பட்டியல் நீளமா இருக்காம். ஆனா சொன்னது போலவே பதவிகள் வரலையாம்.

இந்த தகவல் சேலத்து மாஜியோட காதுக்கு போயிருக்கு. அவரும் தூக்கிடலாமுன்னு திட்டம்போட்டிருக்காரு. ஆனா இலைக்கட்சியோட தலைமை பொறுப்புக்கு மாஜி வந்துட்டாராம். அவருக்கு தடபுடலா வரவேற்பு கொடுத்து அசத்துனாங்களாம். இந்த சமயத்துல ஓமலூருல கட்சி நிர்வாகிகளை சந்திச்சு பேசியிருக்காரு மாஜி. எல்லோரும் திறமைசாலியாக இருக்கீங்க. அதனால யாரையும் மாத்தமாட்டேன்னு சொன்னாராம். இதனால பணம் லபக்கியவர்கள் மகிழ்ச்சியாகவும், பணத்தை கொடுத்தவர்கள் ஷாக்காவும் ஆயிருக்காங்களாம். பதவி ஆசைக்காட்டி தொண்டர்களிடமே ஆட்டையை போடும் ஆசாமிகளிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று இலை கட்சியினரே புலம்பிக் கொண்டு போறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பைல்களில் கையெழுத்து வாங்க முடியும்… கரன்சியை குவிக்க முடியுமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள பில் கலெக்டர்களில் ஒருவரான ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒரு நபர், வசூலில் உச்சத்தில் இருக்கிறாராம். மாநகராட்சி லைசென்ஸ் பெற்ற ‘எல்பிஎஸ்’ என்னும் பொறியாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு, அனைத்து பைல்களிலும் காசு பார்த்து விடுகிறாராம். புதிதாக சொத்து வரி போடுதல், சொத்து வரி பெயர் மாற்றம் என பல்வேறு வகைகளில் கரன்சி குவித்து அசத்துகிறாராம். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இடமாறுதலாகி இங்கு வந்த, இவரது ஆட்டத்துக்கு அளவே இல்லையாம். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதால், தனக்கு கீழ் 5 அசிஸ்டெண்ட்களை நியமித்து, அவர்கள் மூலமாக கரன்சி குவிக்கிறாராம். இதற்காக அவர்களுக்கு மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தன் நிழலாக வைத்து கொண்டு இருக்கிறாராம். பணம் வந்தவுடன், அதற்கு ஏற்ப, கணவனை இழந்த ஒரு பெண் பில் கலெக்டரை, வேறு மண்டலத்தில் இருந்து இடமாறுதல் செய்து, தனது அருகிலேயே வைத்துக்கொண்டாராம். அந்த பெண் பில் கலெக்டருக்கு எல்லாமே இவர்தானாம். இவரது ஒழுங்கீனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேலதிகாரிகள் யாரேனும் நடவடிக்கை எடுத்தால், அவர்களையும் மிரட்டி விடுகிறாராம். கடந்த ஓராண்டுக்கு முன்புவரை இதுபோன்ற ஒழுங்கீன ஊழியர்கள் மீது அந்தந்த மண்டல உதவி கமிஷனர்களே நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது, இந்த அதிகாரம் முழுவதும் மாநகராட்சி கமிஷனருக்கு போயிடுச்சாம். இதனால எங்கே புகார் அளிப்பது என்று மனசாட்சி உள்ளவர்கள் திணறி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்துல கலக்கத்தில் இருக்குதாமே கறுப்பு ஆடுகள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அல்வா நகரத்து காக்கிகளில் கறுப்பு ஆடுகளை களையெடுக்க ராஜாவான போலீஸ் கமிஷனர் முடிவு செய்துள்ளாராம். அதாவது ஒரு டுமீல் வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் ஒயிட் ரவுடியை தேடி வந்தனர். தொழில்நுட்ப உதவியுடன் அவரை பிடிக்க வலைவிரித்தனர். அவர் கோவாவில் இருக்கும் தகவல் கிடைக்க ஏழுமலையான் பெயரைக் கொண்ட இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை டீம் கோவா புறப்பட்டுச் சென்றது. ஆனால் தனிப்படை டீம் கோவா சென்றதை மோப்பம் பிடித்துக் கொண்ட கறுப்பு காக்கிகள் சிலர் ஒயிட் ரவுடிக்கு தகவலை அப்டேட் செய்தனர். உளவுத் துறையை விட விரைவாக தகவல் பெற்றுக் கொண்ட அந்த ஒயிட் ரவுடி உடனே கோவாவில் இருந்து டெல்லிக்கு பறந்து விட்டார். ஆனால் அவரை ட்ரேஸ் செய்த தென் மண்டல ஐஜி டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்து விமான நிலையத்தில் ஒயிட் ரவுடியை மடக்கி விட்டார். ரவுடியை பிடித்து விட்டாலும், அவருடன் தொடர்பில் இருந்த காக்கிகள் யார், அவரை யார் தொடர்பு கொண்டு பேசியது யார் என்று ராஜாவான கமிஷனர் விசாரணையில் இறங்கியுள்ளாராம். இதனால் கறுப்பு ஆடுகள் கலக்கத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வட போச்சே என ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார்களாமே தேனிக்காரரின் ஒன்றியச் செயலாளர்கள். விஷயம் என்ன.. விரிவா சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தின், ‘குளத்தூர்’ என முடிகிற தொகுதியிலிருந்து தேனிக்காரர் அணியைச் சேர்ந்த 3 ஒன்றிய செயலாளர்கள் சமீபத்தில் சென்னைக்கு சென்று ஏமாற்றத்தோடு திரும்பி இருக்கிறார்களாம். தேனிக்காரர் அணியிலிருந்து வந்தால் சில லகரங்கள் கிடைக்குமென சேலத்துக்காரர் தரப்பு ஆசைவார்த்தை கூறி இருந்ததாம். சாமியான சேலத்துக்காரர் அணியின் மாவட்ட செயலாளர் இந்த மூவரையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு போயிருக்கிறார். தன்னை நம்பி வந்தவர்களிடம், ‘பொதுச் செயலாளர் ஆகியாச்சு. வேணும்னா பதவி தர்றோம். பணம் எல்லாம் கிடையாது…’ என சேலத்துக்காரர் கை விரித்து விட்டாராம். ‘பதவி எல்லாம் எதுக்கு? பணம் கிடைச்சாலும் உதவும்…’ என்றபடி ஏமாற்றத்தோடு மூன்று ஒன்றியங்களும் ‘வட போச்சே’ என நொந்து போய் ஊர் திரும்பி விட்டனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post பதவி ஆசைகாட்டி பசையான நிர்வாகிகளிடம் கரன்சி கறந்த இலை கட்சியின் நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Karansi ,wiki Yananda ,Peter ,Saletakkara ,Karansi Malleaf Party ,wiki ,Yananda ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...