
நாகை: திருவள்ளூர் மாவட்டம் கொருக்குபேட்டைக்கு அரவைக்காக அனுப்பி வைக்க 2 ஆயிரம் மெட்ரிக் டன் சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு நாகை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. மூட்டைகளை ஏற்றிச்செல்ல 42 வேகன்களுடன் சரக்கு ரயில் பகல் 12 மணியளவில் வந்தது. நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு வசதியாக நாகை ரயில் நிலையத்தில் உள்ள கடைசி பிளாட்பாரத்தில் ரயிலை நிறுத்த டிரைவர் முயற்சித்தார்.
அப்போது, டிராபிக் மேன் காட்டிய சிக்னல் சரியாக கிடைக்காததால் தண்டவாளம் அருகில் இருந்த தடுப்பு கட்டையில் கடைசியாக இருந்த ஒரு வேகன் மோதி நின்றதோடு தண்டவாளத்தை விட்டு சக்கரம் கீழே இறங்கியது. இந்த சம்பவத்தின் போது பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாகை ரயில்வே நிலைய மேலாளர், திருச்சி அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
காரைக்காலில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பெட்டியை ஜாக்கி கொண்டு தண்டவாளத்தில் ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தொடர்ந்து விடிய விடிய பணியில் ஈடுபட்டு இறங்கிய பெட்டியை தூக்கி நிறுத்தினர். இதனால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
The post நாகையில் தடம் புரண்ட சரக்கு ரயில் appeared first on Dinakaran.

