×

குப்பை கொட்டுவதால் அலங்கோலம்: மந்தைகுளம் கண்மாயை சீரமைக்க வேண்டும்.! விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள மந்தைகுளம் கண்மாய் முறையான பராமரிப்பின்றி குப்பை கொட்டும் தளமாகவும், சாக்கடை நீர் கலக்கும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் மந்தைகுளம் என்ற சின்னகுளம் கண்மாய் உள்ளது. சுமார் 34 ஏக்கர் 54 சென்ட் பரப்பளவில் மிக அகன்ற அழகிய கண்மாயாக அமைந்துள்ளது. இக்கண்மாய்க்கான நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான வீரப்ப அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து கிடைக்கிறது. மந்தைகுளம் என்ற சின்னகுளம் கண்மாய் நிரம்பியதும், இங்கிருந்து மறுகால் பாய்ந்து ஓடும் நீரானது கால்வாய் மூலமாக தேனி நகரில் உள்ள மற்றொரு பிரமாண்ட கண்மாயான மீறுசமுத்திரம் கண்மாயை சென்றடைகிறது. மீறு சமுத்திரம் கண்மாய் நிரம்பியதும், இங்கிருந்து வெளியேறும் நீரானது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கான நீர்பாசன வசதியை கொடுத்து, கொட்டக்குடி ஆற்றின் அருகே உள்ள ராஜவாய்க்காலில் கலக்கிறது.

மந்தைகுளம் என்ற சின்னகுளம் கண்மாயில் நீர் தேங்குவதன் மூலமாக சுற்றியுள்ள பொம்மையக்கவுண்டன்பட்டி, அல்லிநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்குமான நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நடுவே மிக ரம்மியமாக அமைந்திருக்கும் இக்கண்மாய் தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பொம்மையகவுண்டன்பட்டி தொடங்கி அல்லிநகரத்தின் மந்தைகுளம் கண்மாயை ஒட்டியுள்ள தெருக்களுக்கான கழிவு நீர் கலக்கும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலப்பதால் கண்மாய் பகுதியே துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கண்மாயில் ஆகாயத் தாமரை அதிக அளவில் படர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, பொம்மையக்கவுண்டன்பட்டியில் இருந்து வரும் கழிவுநீரை கண்மாய்க்குள் கலக்காமல் தடுக்க தனியாக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இத்தொகை மூலம் முறையாக பணிகளை செய்யாமல் 6 இடங்களில் கண்மாய் கரைகளை உடைத்து, அதில் பெரியஅளவில் பைப்புகளை பதித்து கழிவுநீர் முழுமையாக கண்மாய்க்குள் சேரும்படி செய்து ஒதுக்கிய நிதியை சுரண்டியுள்ளனர். இதுதவிர, கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, கண்மாய் சீரமைப்பு என்கிற பெயரில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி மேற்கொள்வதாக கூறி தனிநிதி சுருட்டப்பட்டது. இதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியின்போது, கண்மாய் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாமல் விட்டதன்காரணமாக கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு ஏராளமான வீடுகள், தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, கண்மாய் பரப்பளவு சுருங்கிபோயுள்ளது. இதனைக்காட்டிலும், கண்மாய் நிரம்பியதும், நீர் வெளியேறி மீறுசமுத்திரம் கண்மாய்க்கு செல்வதற்கான கால்வாய் இருந்தது. ஆனால் கடந்த கால அதிமுக ஆட்சியின்போது இந்த கால்வாய் முழுமையாக மூடப்பட்டு நகராட்சி நிதியில் இருந்து தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இக்கண்மாய் மதகு பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஓடை மூடப்பட்டு சாலை போடப்பட்ட நிலையில் 150 மீட்டர் கடந்ததும் மீண்டும் கால்வாய் அடையாளம் தெரிகிறது.

150 மீட்டர் கடந்ததும், கால்வாய் இருந்தாலும், மந்தைகுளம் கண்மாய் நிரம்பியதும் மறுகால் பாயும் போது முழுமையாக இந்நீர் கால்வாயில் செல்ல வழியில்லாமல் ஓடையை மூடி சிறிய சாக்கடை போல கட்டியுள்ளனர். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் மந்தைகுளம் என்ற சின்னகுளத்தில் நடந்த பணிகள் குறித்தும், நகராட்சி மூலமாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். கண்மாய்க்குள் கழிவுநீர் கலப்பதை தவிர்ப்பதோடு, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். கண்மாய் கரையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குப்பை கொட்டுவதால் அலங்கோலம்: மந்தைகுளம் கண்மாயை சீரமைக்க வேண்டும்.! விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alangolam ,Manthikulam ,Theni ,Manthaikulam Kanmai ,Theni Allinagaram ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!