×

ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி: ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகரித்ததுடன், விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாடுகளை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு மாடு விற்பனை மந்தமானது.

கடந்த மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பால், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை குறைந்து சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளின் வரத்து மந்தமானதுடன் பெரும்பாலான மாடுகளும், குறைந்த விலைக்கே விற்பனையானது. இந்நிலையில், பல வாரத்துக்கு பின் இந்த மாதம் துவக்கத்தில், நடந்த சந்தை நாளின்போது மாடுகள் வரத்து அதிகமானது. கடந்த கடந்த இரண்டு வாரமாக மாடு விற்பனை விறுவிறுப்பானது. ஆனால், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தைநாளின்போது, வரும் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகையை எதிர்நோக்கி, எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பல்வேறு இன மாடுகளில் வரத்து வழக்கத்தைவிட அதிகமானதால் சந்தையில் மாடுகளை நிறுத்த கூட போதிய இடமில்லாமல், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி, மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகரித்ததால், சந்தையின் பெரும்பகுதி வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அதிகாலை முதலே மாடுகளை வாங்க, பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்ததால், சந்தை பரபரப்புடன் இருந்தது. இதில், காளை மாடு ரூ.45 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.38 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.48 ஆயிரம் வரையிலும், கன்று குட்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை என பல மாதத்திற்குபிறகு கூடுதல் விலைக்கு விற்பனையானது. இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக மாடு வர்த்தகம் அதிகபட்சமாக ரூ.1.80 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Ramjan ,Ramzaan ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...