×

வெம்பக்கோட்டை அருகே எட்டக்காபட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராஜபாளையம்: வெம்பக்கோட்டை அருகே அமைந்துள்ள எட்டக்காபட்டியில் பழங்கால நீர்த் தொட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே அமைந்துள்ள எட்டக்காபட்டியில் பழமையான கிணறு ஒன்று பேருந்து நிறுத்தத்தின் அருகில் அமைந்துள்ளது. அந்தக் கிணற்றின் வெளிப்பகுதியில் கல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. இந்த கல்தொட்டியை ஆய்வு செய்த ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது, கிணற்றில் இருந்து நீர் இறைத்து தொட்டியில் சேகரித்து அங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் பழங்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

கல் தொட்டியின் இடது புறத்தில் 4 வரிகளில் தமிழ் கல்வெட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தீப வருடம் பங்குனி மாதத்தில் சின்னச் சங்கர வன்னியன் என்பவர் பொது மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கிணறு மூலம் நீர் இறைத்து சேகரிக்க கல்தொட்டி ஒன்று அமைத்துக் கொடுத்ததாக கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டின் தன்மை 17ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வன்னியர் சமுதாயத்தினர் வாழ்ந்து வந்ததாகவும், அதோடு பிராமணர்களும் இங்கு வசித்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள். கம்பளத்து நாயக்கர்கள், வடுக நாயக்கர்கள், தேவாங்கர் போன்ற சமூக மக்கள் இன்று இப்பகுதியில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள் குளிப்பதற்காக தனியாக தொட்டி அமைத்து உடை மாற்று அறையும் அருகில் அமைந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் எதிர்க்கோட்டை உப்புப்பட்டி மற்றும் சுந்தரராஜபுரம் போன்ற பகுதியிலிருந்து மக்கள் இங்கு வந்து நீரை எடுத்து பயன்படுத்தியுள்ளனர். இந்த கல்வெட்டின் அருமை தெரியாமல் தற்போது கோயிலில் அடிக்கப்படும் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கல்வெட்டுத் தொட்டியிலும் பெயிண்ட் அடித்துள்ளனர். இதனால் இப்போது கல்வெட்டை படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. வரலாற்றை கூறும் கல்வெட்டுகள் மக்களின் அறியாமையால் கல்வெட்டின் மீது பெயிண்ட் அடிக்கக்கூடிய வழக்கம் இன்றும் பல்வேறு கோயில்களில் காணப்படுகிறது. பாரம்பரிய சின்னங்களை அழியாமல் பாதுகாக்க உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வெம்பக்கோட்டை அருகே எட்டக்காபட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Etakapatti ,Vembakotta ,Rajapalayam ,Ettakapatti ,Vembakota ,Wembokotta ,Ettakabatti ,Vembakkotta ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...