×

மோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டு ரூ.30 லட்சம் வாங்கிய டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்ட்..!!

சென்னை: மோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டு ரூ.30 லட்சம் வாங்கிய டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி திட்ட விளம்பரங்களை வெளியிட்டது. இதனை நம்பி 89,000 பேர் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. 89,000 பேரிடமிருந்து சுமார் ரூ. 6,000 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளனர். நிறுவனத்தில் பணம் போட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அதில் 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூ. 1.12 கோடி பணம், ரூ. 34 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 16 கார்கள், 49 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பெற்று அமலாக்கத்துறையும் விசாரணையை துவங்கி உள்ளது. இந்நிலையில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி கபிலன் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் தொடர்பாக டி.எஸ்.பி கபிலனிடம் 2 நாட்களாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

அதில் ஹரி என்பவரிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டி.எஸ்.பி. கபிலன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது நீலாங்கரை வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றது உறுதியான நிலையில் டி.எஸ்.பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மேடாக் உத்தரவிட்டுள்ளார்.

The post மோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டு ரூ.30 லட்சம் வாங்கிய டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : I. F.F. TD ,US ,S.S. GP Kabilan ,Chennai ,UN F.F. TD ,S.S. GP Kapilan ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!