×

குருடாயில் எடுத்து செல்ல கடற்கரையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் அகற்றும் பணி

நாகப்பட்டினம்,ஏப்.19: நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தால் (சிபிசிஎல்) குருடாயில் எடுத்து செல்ல புதைக்கப்பட்ட குழாய்களை அகற்றும் பணியை தேசிய பசுமை தீர்ப்பாய ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குருடாயில் எடுத்து செல்லும் குழாயில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மீனவ கிராமங்களில் மாசு ஏற்பட்டது. எனவே கடற்கரையையொட்டி பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் வலியுறுத்தினர்.

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்புகளை ஆய்வு செய்தார். மேலும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும். மீனவ கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து 28ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் சிபிசிஎல் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் குழாயை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஎல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உறுதி அளித்தனர். இதன்படி பூமிக்கு அடியில் போடப்பட்ட குழாய் அகற்ற பணியை சிபிசிஎல் நிறுவனம் தொடங்கியது. இதை ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கொண்ட 5 பேர் குழுவை நியமித்தது. இந்த குழுவினர் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குழாய்கள் அகற்றும் பணியை ஆய்வு செய்தனர். அப்போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட 850 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

The post குருடாயில் எடுத்து செல்ல கடற்கரையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Chennai Petroleum Corporation ,CPCL ,Nagur Pattinacheri ,Dinakaran ,
× RELATED 5 மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன்...