×

9 விருதாளர்களுக்கு ரூ.22.25 லட்சத்துக்கு காசோலைகள் சிறந்த கைத்தறி நெசவாளர், இளம் வடிவமைப்பாளருக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 விருதாளர்களுக்கு ரூ.22.25 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்காக ‘சிறந்த நெசவாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ‘சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது’ 2022-23ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருதிற்கான முதல் பரிசுத் தொகை ரூ.1 லட்சம், 2ம் பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம், 3ம் பரிசுத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (18ம் தேதி) நடந்த நிகழ்ச்சியில் 2022-23ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ராஜலெட்சுமிக்கும், 2ம் பரிசை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சுரேஷுக்கும், 3ம் பரிசை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மணிக்கும், பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசை பரமக்குடி, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சரவணனுக்கும், 2ம் பரிசை பரமக்குடி, கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் நாகராஜனுக்கும், 3ம் பரிசை சேலம், தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இந்திராணிக்கும் என மொத்தம் 6 விருதாளர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்க்கினார்.

மேலும், மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசை கோயம்புத்தூரை சேர்ந்த சண்முகப்பிரியாவுக்கும், 2ம் பரிசை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் 2ம் ஆண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம் பயிலும் மாணவரான திருப்பூரை சேர்ந்த சிபினுக்கும், 3ம் பரிசை ஆரணியைச் சேர்ந்த கிரண்குமாருக்கும் என மொத்தம் 3 விருதாளர்களுக்கு ரூ.2.25 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 9 விருதாளர்களுக்கு ரூ.22.25 லட்சத்துக்கு காசோலைகள் சிறந்த கைத்தறி நெசவாளர், இளம் வடிவமைப்பாளருக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...