×

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு நீதிபதியின் 422 கேள்விகளுக்கு மாஜி டிஜிபி, எஸ்பி பதிலளிப்பு: விழுப்புரம் கோர்ட்டில் நள்ளிரவு வரை நடந்த விசாரணை

விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் 68 சாட்சிகள் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிபதியின் 422 கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இதனால் விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புகாரில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகள் துவங்கி நடைபெற்று வந்தன. மொத்தமுள்ள 68 சாட்சிகளிடமும் விசாரணையும், எதிர் தரப்பு குறுக்கு விசாரணையும் கடந்த 10ம் தேதி நிறைவு பெற்ற நிலையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகினர்.

தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி 297 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். செங்கல்பட்டு எஸ்பி 125 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முதல் குற்றவாளியான சிறப்பு டிஜிபி நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிற்பகல் வரை 50 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடுதல் நாட்கள் அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை நிராகரித்த நீதிபதி இந்த வழக்கை விரைந்து முடித்தாக வேண்டும். நள்ளிரவு ஆனாலும் பரவாயில்லை. கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் 422 கேள்விகளுக்கு நள்ளிரவு வரை பதில் அளித்தனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு நீதிபதியின் 422 கேள்விகளுக்கு மாஜி டிஜிபி, எஸ்பி பதிலளிப்பு: விழுப்புரம் கோர்ட்டில் நள்ளிரவு வரை நடந்த விசாரணை appeared first on Dinakaran.

Tags : DGP ,SP ,Villupuram ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு