×

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் ஆக.14ம் தேதி தொடங்கும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தொடர்ந்து சர்வதேச போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வரும் தமிழ்நாடு அரசு, அடுத்து இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்துடன் (டிஎன்எஸ்ஏ) இணைந்து சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை நடத்த உள்ளது.

சர்வதேச அலைச்சறுக்கு ஓபன்-2023 என்ற பெயரில் நடத்தப்படும் இப்போட்டி ஆக.14 முதல் 20ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும். மொத்தம் 3000 தரப்புள்ளிகளை கொண்ட இப்போட்டியில் பெறும் வெற்றியின் மூலம், உலக அலைச்சறுக்கு சாம்பியன் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் 20 பேர் கொண்ட இந்திய அணி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சர்வதேச தரவரிசைப் புள்ளிகள் அடிப்படையில் பங்கேற்பதற்கு தகுதியானவர்களை சர்வதேச அலைச்சறுக்கு கூட்டமைப்பு (ஐஎஸ்எப்) முடிவு செய்யும்.

இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள 20 பேரில் 19 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர். போட்டியில் பங்கேற்க உள்ள நிதிஷ் அருண், அஜேஷ் அலி, ரமேஷ், சூர்யா உள்பட அனைவரும் வெற்றி வாகை சூடவும், அதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவும் வாழ்த்துகிறேன். இப்போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.2.67 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும், போட்டி சிறப்பாக நடைபெற தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். இந்த நேரத்தில் தமிழகத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த விளையாட்டு துறைக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்துவரும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி கூறினார்.

முன்னதாக பேசிய எஸ்எப்ஐ, டிஎன்எஸ்ஏ தலைவர் அருண் வாசு, ‘கோவளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் சிறு புள்ளியாக தொடங்கிய அலைச்சறுக்கு விளையாட்டு, இப்போது சர்வதேச போட்டியை நடத்தும் தளமாக மாறியுள்ளது. சர்வதேச போட்டியை இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் நடத்த ஆர்வம் காட்டி, ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. அலைச்சறுக்கு போட்டியை கடல் உள்ள எல்லா இடங்களிலும் நடத்தி விட முடியாது. அதற்கான சூழல் உள்ள இடங்களில் மட்டுமே நடத்தப்படும். கோவளம், மாமல்லபுரம் கடல் பகுதி அதற்கு உகந்தவையாக இருக்கின்றன. அதற்கு உதவியாக இருக்கும் கோவளம் மக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு நன்றி. எல்.சால்வடார் சர்வதேச அலைச்சறுக்கு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற 4 வீரர்களில் 3 பேர் தமிழக வீரர்கள்.

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள போட்டியில் 5 வீராங்கனைகள் உட்பட 10 இந்தியர்கள் சிறப்பு அனுமதியின் மூலம் பங்கேற்க உள்ளனர். சர்வதேச அளவில் 12 முதல் 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, டிஎன்எஸ்ஏ துணைத் தலைவர் வீரபாகு ஆகியோர் பங்கேற்றனர். கூடவே இந்திய அணி வீரர்கள் அஜேஷ், ரமேஷ், சஞ்ஜெய், சிவராஜ் ஆகியோரை அமைச்சர் உதயநிதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். முன்னதாக தமிழக அரசின் பங்களிப்பாக 2 கோடியே 67 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி, கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினார்.

The post இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : First International Surfing Competition ,India ,Minister Udayanidhi ,Chennai ,Mamallapuram, Tamil Nadu ,Sports ,Minister ,international surfing competition ,Udayanidhi ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!