×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து இன்ஸ்டாகிராம் காதலன் கொலையா?.காதலி, குடும்பத்தினரிடம் விசாரணை

அண்ணாநகர்: கோயம்பேட்டில் இன்ஸ்டாகிராம் காதலன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி என்பவரின் மகன் சஞ்சீவ்குமார் (18), திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றினார். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இருவருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில், கடந்தாண்டு தனது மகளை சஞ்சீவ்குமார் அழைத்து சென்றதாக சிறுமியின் தாய் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன்படி, போக்சோவில் சஞ்சீவ்குமாரை போலீசார் கைது செய்து கெல்லீசில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சில தினங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, சஞ்சீவ்குமார் கடந்த 7ம்தேதி தனது பிறந்தநாளையொட்டி, காதலியை அழைத்துக்கொண்டு சென்னையில் கடற்கரை, சினிமா என்று பல்வேறு இடங்களுக்கு சுற்றிவந்துள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அவரது தாய் மீண்டும் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், 2வது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சீவ்குமாரை தேடிவந்தனர்.

இந்நிலையில், அந்த காதல் ஜோடி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றிவருவதாக, சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற அவர்கள் சஞ்சீவ்குமாரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு வந்தனர். அப்போது சிறுமி தனது காதலனை பார்த்து, ‘‘நீ குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்துள்ளனர்’’ என்று கூறினார். இதன்பிறகு, சிறிது நேரத்தில் சஞ்சீவ்குமார் அங்கிருந்து பஸ்சில் செங்குன்றத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வந்து மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது தம்பியை ஆவடி அடுத்த கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். பின்னர், அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த கோயம்பேடு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது சஞ்சீவ்குமார், ‘‘கடந்த 7ம் தேதி எனது பிறந்தநாள் அன்று, காதலி என்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து, குடிப்பதற்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் குடித்ததும் ‘‘என்ன மன்னிச்சிருடா; நீ குடிச்ச குளிர்பானத்தில் எலி மருந்து கலந்திருக்கு, உன்னோட தொல்லை தாங்கலடா, உன்னை பழிவாங்கத்தான் இங்க வரச்சொன்னேன்.’’ என்று கூறி, எனது கையில் இருந்த செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். எனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாக சிறுமியின் தாயும், சகோதரியும் சேர்ந்து என்னை தாக்கி கீழே தள்ளியதுடன் கடுமையாக எச்சரித்தனர்’’ என தெரிவித்தார்.

இதனிடையே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சஞ்சீவ்குமார் கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக போலீசார் பதிவு செய்து, சிறுமி, அவரது தாய் மற்றும் சகோதரிடம் விசாரணை நடத்தியதில், ‘‘இன்ஸ்டாகிராமில் தங்கள் வீட்டுப்பெண் தெரியாத்தனமாக சஞ்சீவ்குமாருடன் பழகிவிட்டாள். இதனால் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். அவனே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்து விட்டான்’’ என்றனர்.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சிறுமியுடன் பேருந்து நிலையத்தில் சுற்றிய சஞ்சீவ்குமார், ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்குவதுபோன்ற காட்சியும், அதன்பின் காதலியின் குடும்பத்தினர் தாக்கும் காட்சிகளும், பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், சிறுமி குளிர்பானம் கொடுக்கவில்லை என்பது உறுதியானது. அப்படியென்றால், சஞ்சீவ்குமார் தானாக குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்துவிட்டு, காதலி குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் வாக்குமூலம் அளித்தாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து இன்ஸ்டாகிராம் காதலன் கொலையா?.காதலி, குடும்பத்தினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Koyambedu bus station ,Annanagar ,Coimbatore ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை...