×

லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி: 2 பேருக்கு போலீசார் வலை

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி காமராஜர் சாலையை சேர்ந்தவர் இந்திரா (44). இவர், தனது மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் தேவைப்பட்டதால் வங்கியில் லோன் வாங்கித் தரும்படி அதே பகுதியைச் சேர்ந்த ஜோயல் பேரின்பராஜ் மற்றும் ஆனந்த்பாபு ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். இருவரும், கடந்த 2019ம் ஆண்டு வங்கியில் லோன் எடுப்பதற்கு இந்திராவின் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் வீட்டின் டாக்குமெண்ட் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டனர். பிறகு, இந்திராவுக்கு தெரியாமல் இருவரும் 5 வங்கிகளில் மொத்தம் ரூ.26 லட்சத்து 65 ஆயிரம் லோன் எடுத்துள்ளனர். பல மாதங்களாக லோன் கட்டாததால் வங்கி ஊழியர்கள் வந்து இந்திராவிடம் கேட்டுள்ளனர்.

அப்போதுதான், தன் பெயரில் வங்கியில் லோன் எடுத்தது அவருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து இந்திரா போலீசாரிடம் புகார் அளித்தார். 4 வருடங்கள் கடந்த நிலையில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ஜோயல் பேரின்பராஜ் மற்றும் ஆனந்த்பாபு ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட பெண்ணிடம் வீட்டையே அடமானம் வைத்து ரூ.26 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி: 2 பேருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Indira ,Erukkancheri Kamarajar Road, Kodunkaiyur ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...