×

சித்த மருத்துவ பல்கலை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1.47 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். இத் திட்டத்தின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்கு கணக்கீடு செய்து பார்க்கும் பொழுது தொற்றா நோய்களினால் இறப்பு என்பது இல்லா நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்கின்ற மகத்தான திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்தி 791 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆண்டொன்றுக்கு 1250 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஓராண்டில் 1532 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்களின் மூலம் 15 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

2009 ஆண்டு ஜீலை 23 அன்று கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் இருந்து இதுவரை 1,26,85,664 பேர் ரூ.11,000 கோடி செலவில் பயன்பெற்றிருக்கிறார்கள். கிண்டியில் கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு மருத்துவமனை பிரமாண்டமாக கட்டும்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய கலாச்சாரம் ரத்தத்தில் ஓவியங்கள் வரைந்து காதலனுக்கும், காதலிக்கு அனுப்புவது, இதற்காக தமிழ்நாட்டில் ஆங்காங்கே ரத்த ஓவிய மையம் நகர்புறங்களில் தோன்றியது. இதனால் கிருமிகள் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் 7 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்துடன் என்ன சண்டை என்றே தெரியவில்லை. ஆளுநர் அதற்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக தன்னுடைய இருப்பிலே வைத்திருந்தார். பின்னர், மீண்டும் முதல்வரின் அழுத்தத்தின் காரணமாக திருப்பியனுப்பினார்கள். திருப்பி அனுப்பிய பிறகு இரண்டாவது முறையும் அந்த மசோதா நிறைவேற்றி, அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றி அனுப்பியதற்குப் பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நிச்சயம் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு வந்தே தீர வேண்டுமென்கிற நிலையில், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல, சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருமே இன்றைக்கு விரும்புகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post சித்த மருத்துவ பல்கலை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Ma. Subramanian ,Maa ,Suframanian ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...