×

சிலரின் தூண்டுதலில் போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரைலூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் தரப்பில் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

மீனவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் வாதிடும்போது,லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது. நடைபாதைகள் அமைக்க கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையும் மீறி மாநகராட்சி இந்த சாலையை விரிவுபடுத்தியுள்ளது என்றார். மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஏப்ரல் 12 முதல் லூப் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த பணிகள் தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாத சாலையாக இருப்பது உறுதிசெய்யப்படும். கடற்கரையை ஒட்டிய மீன் கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடங்களில் மட்டும் நிறுத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அனுமதி அளித்தால் மீன் சந்தை கட்டுமான பணிகள் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்து சாலையை ஒழுங்குபடுத்த தயாராக உள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக போக்குவரத்து முறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் கடந்த ஒரு வாரமாக லூப் சாலையில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது. சட்டத்தை மீறும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அவர்களின் வழக்கறிஞர்கள் அறிவுறுத்த வேண்டும். மீனவர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளார்கள். இரு புறமும் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை இயக்க முடியவில்லை.

சாலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். பசுமை தீர்ப்பாய உத்தரவு, சுற்றுச்சூழல் அனுமதி பற்றி தான் குறிப்பிடுகிறது. லூப் சாலை நடைபாதையில் உணவகங்கள் அதிகரித்துள்ளன. நடைபாதையில் உணவு சமைக்கப்படுவதை தடுப்பது மாநகராட்சியின் கடமை இல்லையா, சாலையை சமையலறையாக பயன்படுத்துகின்றனர். சாலையில் 15 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து சாலை வரையுள்ள பகுதியில் மீன் கடைகள் அமைக்க மாநகராட்சி தரப்பில் கோரிய அனுமதி குறித்து மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

The post சிலரின் தூண்டுதலில் போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Marina Link Road ,High Court ,CHENNAI ,Kalangaraivilakkam ,Pattinpakkam ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...