×

சென்னை மாநகராட்சியில் ரூ.291.29 கோடி மதிப்பீட்டில் 3,108 உட்புற சாலைகள் சீரமைப்பு: ரூ.76.56 கோடியில் 87 பேருந்து தட சாலை பணி தீவிரம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களின்கீழ், சாலைகள் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, ரூ.291.29 கோடியில் 3108 உட்புற சாலைகளும், ரூ.76.56 கோடியில் 87 பேருந்து தட சாலை பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படியும், சென்னை மேயர் பிரியாவின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் மற்றும் 5,270 கி.மீ. நீளமுடைய 34,640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் (டியுஆர்ஐஎப்), சிங்கார சென்னை 2.0 மற்றும் மாநகராட்சி மூலதன நிதி மற்றும் வெளி ஆதாரத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சியின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையரின் தலைமையில், உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட குழுவினரால் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-1 ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் ரூ.291.29 கோடி மதிப்பீட்டில் 3,108 உட்புறச் சாலைகள், ரூ.76.56 கோடி மதிப்பீட்டில் 87 பேருந்து தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவற்றில், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 28 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.8.39 கோடி மதிப்பீட்டில் 15 சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் 7 சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், ரூ.89.07 கோடி மதிப்பீட்டில் 997 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் 296 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.35.79 கோடி மதிப்பீட்டில் 414 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.26.43 கோடி மதிப்பீட்டில் 287 உட்புறச் சாலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகளில் ரூ.41.11 கோடி மதிப்பீட்டில் 414 உட்புறச் சாலைகள், ரூ.31.33 கோடி மதிப்பீட்டில் 30 பேருந்து தட சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதுதவிர, ரூ.161.11 கோடி மதிப்பீட்டில் 1697 உட்புறச் சாலைகள், ரூ.27.23 கோடி மதிப்பீட்டில் 29 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post சென்னை மாநகராட்சியில் ரூ.291.29 கோடி மதிப்பீட்டில் 3,108 உட்புற சாலைகள் சீரமைப்பு: ரூ.76.56 கோடியில் 87 பேருந்து தட சாலை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...