×

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: மாவட்ட பத்திரப்பதிவு அலுவலரிடம் புகார்

திருவள்ளூர்: ஆவடி சின்ன அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி(76). இவரது கணபர் ராமு. இவர்களது ஒரே வாரிசு மகள் கிரிஜா (46)வுக்கு சொந்தமான 15 ஆயிரத்து 680 சதுர அடி நிலம் பருத்திப்பட்டு பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும். இந்த நிலத்தை முகப்பேரை சேர்ந்த பெ.ஜமாலுதீன் என்பவரது மனைவி ஷமிலதா என்பவர் கடந்த 2021-ல் கிரையப்பத்திரம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சத்திற்கு ஒரு காசோலையும், ரூ.62 லட்சத்திற்கு மற்றொரு காசோலையும் என 2 காசோலைகள் மூலம் ரூ.75 லட்சத்திற்கு முன்பணத்திற்காக மங்கையர்க்கரசியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்த போதும், ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஆவடி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில். சென்னை உயர் நீதிமன்றம் நாடி சொத்தை மீட்க ரிட் மனு தாக்கல் செய்தனர். இதில் மங்கையர்கரசிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், திருவள்ளூர் அருகே வேடங்கி நல்லூரில் உள்ள மாவட்ட பத்திர பதிவு அதிகாரி கல்பனா மங்கையர்க்கரசியை வர சொன்னதையடுத்து வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியை மகள், மருமகன் என இருவரும் சேர்ந்து 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளதால் மேலே செல்ல முடியாத மங்கையர்க்கரசி சுமார் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் காக்க வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து விசாரணை செய்துள்ளார். அப்போது, மூதாட்டி மங்கையர்க்கரசிக்கு கொடுக்கபட்ட காசோலை, பணம் இல்லாமல் திரும்பி வந்த நிலையில் சட்டவிரோத பத்திரப் பதிவு செய்த சீனிவாசன் மற்றும் சமிலதா ஆகியோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக செயல்பட்ட ஆவடி பத்திரபதிவாளர் மீதும், மூதாட்டியை ஏமாற்றிய தரகர்கள் கும்பல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட பத்திரப் பதிவு அதிகாரி கல்பனாவிடம் மூதாட்டி மங்கையர்க்கரசி சார்பில் புகார் அளித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

The post ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: மாவட்ட பத்திரப்பதிவு அலுவலரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Avadi ,District ,Deeds ,Tiruvallur ,Mangaiyarkarasi ,Avadi Chinna Amman Kovil Street ,Ramu ,District Deeds ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்