×

ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் 13ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டெடுப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் 13ம் நூற்றாண்டின் பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது.ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஊத்துக்கோட்டை நீதிமன்ற நீதிபதி செந்தமிழ் செல்வன் நடைபயிற்சிக்கு சென்றபோது, ஆரணியாற்றின் மையப்பகுதியில் ஏதோ சாமி சிலை பதிக்கப்பட்ட வெள்ளைக் கல் ஒன்று இருந்ததை கண்டார். உடனே அவர் பாலத்தின் கீழ் பகுதிக்குச் சென்று பார்த்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இதையறிந்த ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அந்த கல் சிலையைப் பார்க்க குவிந்தனர்.

4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட அந்த வெள்ளைக் கல்லில் காலபைரவர் உருவம் பதிக்கப்பட்டு, அதன் கீழ் பகுதியில் கட்டங்கள் வரையப்பட்டு, அதில் சில எழுத்துகள் வரையப்பட்டு இருந்தன. இந்த எழுத்துகள் எந்த காலத்தில் வரையப்பட்டது என தெரியவில்லை. மேலும் இதுகுறித்து நீதிபதி ஊத்துக்கோட்டை வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையறிந்த தாசில்தார் வசந்தி மற்றும் வருவாய் துறையினர் அந்த சிலையை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலை 13ம் நூற்றாண்டைச் சார்ந்த சிலையா என்பது ஆராய்ச்சிக்குப் பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் கூறினர். இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் 13ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Bairavar Statue ,Uthukkotta Araniyad ,Bairavar ,Uthukkotta Arniyadu ,Byravar Statue ,Uthukkotta Aranyad ,
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு