×

ரயிலில் பயணிகளுக்கு தீ வைப்பு என்ஐஏ விசாரணை துவக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை துவங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து கண்ணூர் சென்ற எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 11 நாள் காவலில் வைத்து விசாரிக்க கேரள போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விசாரணையில் ஷாருக் செய்பிக்கு சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க ஒன்றிய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து என்ஐஏவின் கொச்சி பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விசாரணையில் ஷாருக் செய்பிக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, அவருக்கு கேரளாவில் ஏதாவது தீவிரவாத அமைப்பு உதவியதா என்பது குறித்த பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ஷாருக் செய்பி கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ரயிலில் பயணிகளுக்கு தீ வைப்பு என்ஐஏ விசாரணை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : NIA ,Thiruvananthapuram ,National Investigation Agency ,Kozhikode ,
× RELATED தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக...