×

சூடுபிடித்த களம்

2024 மக்களவை தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அதானி விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கியது என்றால், அதை தொடர்ந்து ராகுல் எம்பி பதவியை பறித்தது, அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்சென்று விட்டது. இப்போது பா.ஜ பலவீனமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து பலப்படுத்தும் பணி அமித்ஷா வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தெரியும். 35 தொகுதியில் பா.ஜ வெற்றி பெற்றால் மேற்குவங்கத்தில் 2025ல் மம்தா ஆட்சி இருக்காது என்ற அவரது சமீபத்திய சர்ச்சை பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.

தமிழ்நாடு, கேரளா, புதுவை, தெலங்கானா, ஆந்திரா எப்போதுமே பா.ஜவுக்கு கைகொடுக்காது. இந்த முறை கர்நாடகாவும் காலைவாரி விடும் என்கிறார்கள். மே 13ம் தேதி சட்டப்பேரவை முடிவில் இது தெரிந்து விடும். ஏனெனில் இந்த தென்மாநிலங்களில் மட்டும் 130 எம்பி தொகுதிகள் உள்ளன. இங்கு கர்நாடகாவில் 25, தெலங்கானாவில் 4 தொகுதிகளில் மட்டுமே 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று இருந்தது. இப்போது நிலைமை இன்னும் சிக்கல். இதுதவிர 2019ல் கூட்டணியாக இருந்த ஐக்கியஜனதா தளம், சிவசேனா, சிரோண்மனி அகாலிதளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை பா.ஜ பகைத்துக்கொண்டது.

ஆம்ஆத்மி நிறுவனர் கெஜ்ரிவாலை ‘உள்ளே தள்ளும்’ அளவுக்கு சென்றுவிட்டது. இதுதவிர மம்தாவுடன் எப்போதுமே எதிரிபுதிரியாக உள்ளது. அமைதியான ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக்கையும் பா.ஜ விடவில்லை. அவரையும் சீண்டிபார்த்துவிட்டது. இதனால் அத்தனை பேரும் இப்போது பா.ஜவுக்கு எதிராக இருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் இந்த தேர்தலில் பா.ஜவுக்கு பங்கம் ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது. இந்த 6 மாநிலங்களில் மொத்தம் 171 எம்பி தொகுதிகள் உள்ளன.

இதில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ 74 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அத்தனை தொகுதிகள் பெறுவது சந்தேகம் என்கிறார்கள். அதோடு கடந்த முறை ராஜஸ்தானில் 24, மபியில் 28, குஜராத்தில் 26, அரியானாவில் 10, ஜார்க்கண்ட்டில் 11, உத்தரகாண்ட்டில் 5, உபியில் 62 இடங்களை கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் எல்லாம் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. ஆனால் இந்த முறை?. அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வந்தது.

இப்போது அந்த நடவடிக்கை அவர்களுக்கே எதிராக அமைந்து இருக்கிறது. இதனால் 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ மட்டும் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்னொரு அணியாகவும் நிற்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கெல்லாம் முதல் அடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்தார். அதை தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்தகட்ட பணியை செய்துவருகிறார். இந்த முயற்சியை உருக்குலைக்கவும், எதிர்க்கட்சி ஒற்றுமையை பிரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ மேற்கொண்டு வருகிறது. அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது வருங்காலங்களில் தெரியவரும்.

The post சூடுபிடித்த களம் appeared first on Dinakaran.

Tags : Hatted Field ,Adani ,Parliament ,Heated ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...