×

தண்டலம் ஊராட்சியில் பொதுமக்கள் திடீர் எதிர்ப்பால் கிணறு தோண்டும் பணி நிறுத்தம்

திருப்போரூர்: தண்டலம் ஊராட்சியில் சிட்கோ சார்பில் கிணறு தோண்டும் பணி தொடங்கியபோது, பொதுமக்கள் திடீர் என எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தற்காலிகமாக தடுத்தப்பட்டுள்ளன. திருப்போரூர் ஒன்றியம், ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் 25 ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்த சிட்கோ நிர்வாகத்திற்கு சொந்தமாக தண்டலம் கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சிட்கோ நிர்வாகம் சார்பில் கிணறு தோண்டப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு நேற்று கிணறு தோண்டுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் மூலம் சிட்கோ ஒப்பந்த ஊழியர்கள் வந்தனர். அப்போது பணிகளை தொடங்கியதும் அங்கு வந்த தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தண்டலம் ஏரிப்பாசன சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஊராட்சியில் முறையான அனுமதி பெறாமல் கிணறு தோண்டப்படுவதாகவும், இவ்வாறு கிணறு தோண்டி குழாய் மூலம் லட்சக்கணக்கான லிட்டரில் தினசரி தண்ணீர் எடுத்துச் சென்றால், அருகில் ஊராட்சி மன்ற குடிநீர் கிணற்றில் நீர் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

மேலும், பொக்லைன் இயந்திரத்தை மறித்து நின்று கோஷங்களை எழுப்பியதால் பணிகள் நிறுத்தப்பட்டது. சிட்கோ தொழிற்பேட்டை தரப்பில் கடைநிலை அலுவலர்கள் வந்து, இது அரசின் திட்டம் என்றும், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படும் என்றும் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படாது என்று கூறினர். ஆனால், இதை ஏற்க மறுத்த ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அரசின் இந்த முடிவை எதிர்த்து மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளதால், அதுவரை பணியை நிறுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து தற்காலிகமாக பணியை நிறுத்தி வைப்பதாக சிட்கோ அதிகாரிகள் தெரிவித்து, தங்களது பொக்லைன் இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.

The post தண்டலம் ஊராட்சியில் பொதுமக்கள் திடீர் எதிர்ப்பால் கிணறு தோண்டும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thandalam Panchayat ,Tiruporur ,CITCO ,
× RELATED செங்கல்பட்டு திருப்போரூர்...