×

திருப்போரூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில், தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வரும் முதியோர் காப்பகம் மற்றும் முட்டுக்காடு ஊராட்சி வாணியஞ்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் வருகைப்பதிவேடு, பெற்றோர் மற்றும் உறவினர் விவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், படுக்கை வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார். இதையடுத்து, முதியோருக்கு இலவச வேட்டி, சேலை, குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லட் போன்றவற்றை வழங்கினார்.

இதைதொடர்ந்து, திருப்போரூர் ஒன்றியம், பையனூரில் உள்ள கலைஞர் திரைப்பட நகரத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்புக்கான இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு கோயில், நீச்சல்குளம், கிராமப்புற வீடுகள் அடங்கிய தெரு, ஜெயில் செட் போன்றவை அமைக்க வேண்டும் என்று பெப்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக உறுதியளித்தார்.மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்புக்கான கட்டுமான ஒப்பந்தம் முடிவு பெற்றுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும், இங்கு கட்டப்பட உள்ள குடியிருப்புவாசிகளுக்கு என தனியாக மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, பையனூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள மியாவாக்கி காடுகள் திட்டத்திற்கான நாற்றங்கால் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் வள்ளி எட்டியப்பன், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், பையனூர் சுமிதா முத்துக்குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணகுமர், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஆகியோர் உடனிருந்தனர். பையனூர் கலைஞர்் திரைப்பட நகரத்தில் நடந்த ஆய்வின்போது உடனிருந்த பெப்சி துணைத்தலைவர் இசையமைப்பாளர் தினா செய்தியாளர்களிடம் கூறியதாவது

பையனூரில் உள்ள கலைஞர் திரைப்பட நகரில் தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர், விஜய் நடிக்கும் லியோ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம், சிறிய காட்சிகளை எடுக்க வேண்டுமெனில் கர்நாடகா, கேரளா, மும்பை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். தற்போது, அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. இந்த திரைப்பட நகரம் பெரிய அளவிலான பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களும், குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இந்த திரைப்பட நகரத்தை உருவாக்கிய கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது உருவச்சிலை இந்த வளாகத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் பெப்சி திரைப்பட கலைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்போரூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் முதியோர், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Union ,Tiruporur ,Sengalpattu ,Rahul Nath ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்