×

ரத்தத்தில் ஓவியங்கள் வரைய மற்றும் ரத்த ஓவிய கூடங்கள் செயல்பட தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு 2-வது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா தொடர்பாக 2வது முறையாக விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக இரண்டு முறை விளக்கம் கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அளிக்கப்பட்ட விளக்கத்தையும் ஏற்காமல் இன்று மீண்டும் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார் என கூறினார். புதிதாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கருத்தில் கொண்டு மார்ச் 10-ம் தேதி 1,500 முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 58,533 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, அதன் மூலம் 23 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரையக்கூடிய புதிய கலாசாரம் அதிகரித்துவருகிறது. இதன் மூலம் நோய் தொற்று பரவல் ஏற்படுவதால், இவ்வகை ஓவியங்கள் வரைய மற்றும் ரத்த ஓவிய கூடங்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும். காஞ்சிபுரத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.

கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.95 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு நிறுவப்படும். ராயப்பேட்டை அரசு மருத்துவ்மானைக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூ.40.05 கோடியில் நிறுவப்படும். 2286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்தார்.

The post ரத்தத்தில் ஓவியங்கள் வரைய மற்றும் ரத்த ஓவிய கூடங்கள் செயல்பட தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Suframanian ,Chennai ,Governor ,Siddha Medical University ,Ma. Superamanian ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்